‘பேராண்மை’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘போராளி’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், வசுந்தரா. இப்போது, ‘கண்ணை நம்பாதே’, ‘தலைக்கூத்தல்’ படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் பற்றி அவர் கூறியதாவது:
மு.மாறன் இயக்கியுள்ள ‘கண்ணை நம்பாதே’ படம் உதயநிதி, பிரசன்னா, ஸ்ரீகாந்த் என மல்டிஸ்டார் படமாக உருவாகியுள்ளது. திரில்லர் படமான இதில் எனக்கு மாடர்ன் கதாபாத்திரம். இதில் உதயநிதிக்கும் எனக்கும் விறுவிறுப்பான காட்சிகள் இருக்கின்றன. அடுத்து ‘லென்ஸ்’ ஜேபி (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்) இயக்கத்தில், ‘தலைக்கூத்தல்’ படத்தில் நடித்து முடித்துள்ளேன்.
இதில் சமுத்திரக்கனி ஜோடியாக நடித்துள்ளேன். இந்தப் படத்தின் காட்சிகள் லைவ் சவுண்ட் முறையில் படமாக்கப்பட்டது புதிய அனுபவமாக இருந்தது. ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார். அடுத்து லட்சுமி நாராயணன் என்பவர் இயக்கும் திரில்லர் படத்தில் நடிக்கிறேன். இந்த வருடம் ஓடிடி படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இவ்வாறு வசுந்தரா தெரிவித்துள்ளார்.