மதுரை: துணிவு, வாரிசு படங்கள் நாளை ரிலீசாகவுள்ளதையொட்டி மதுரையில் சிறப்பு காட்சிகளை வரவேற்று அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகம் காட்டினர்.
தமிழக திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித், விஜய். அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படமும், விஜய் நடித்த ‘வாரிசு’ படமும் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (ஜன.,11) ரிலீஸ் ஆகவுள்ளது. துணிவு படம் நள்ளிரவு 1 மணிக்கும், வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் மதுரையில் பல்வேறு தியேட்டரிகளில் ரிலீசாகவுள்ளது. முதல் காட்சி ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியாக திரையிடப்படவுள்ளது. வாரிசு படம் பல தியேட்டரில் ரிலீசாக உள்ள நிலையில், மதுரை அமிர்தம் தியேட்டரில் விஜய் ரசிகர் மன்றத்தினர் உற்சாக கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். முதல்காட்சியை வரவேற்கும் விதமாக விஜய்யின் பேனர்களுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்தும், பட்டாசு, வானவெடிகள் வெடித்தும் உற்சாகம் காட்டினர்.
மதுரை கணேஷ், சண்முகா, தமிழ் ஜெயா உட்பட பல்வேறு தியேட்டர்களில் துணிவு படம் திரையிடப்படவுள்ள நிலையில், மதுரை சினிப்பிரியா காம்பளக்ஸில் அஜித் ரசிகர்கள் முதல் காட்சியை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். வண்ண, வண்ண சிரீயல் லைட்டுகளால் தியேட்டர் வளாகம் அலகாரம் செய்யப்பட்டு இருந்தது. ஒரே நாளில் இரு முன்னணி நடிகர்களின் புதிய திரைப்படங்களும் திரையிடப்பட இருப்பதால் நகரிலுள்ள பல்வேறு தியேட்டர்களிலும் விஜய், அஜித் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இரு படங்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு பேனர்கள், தோரணங்களை கட்டி வரவேற்று வருகின்றனர். இதனையொட்டி தியேட்டர்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய சரக எஸ்ஐ ஒருவர் தலைமையில் தேவைக்கேற்ப பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
விஜய், அஜித் ரசிகர் மன்றத்தினர் கூறுகையில், ‘‘ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகளை வரவேற்று உற்சாகமாக கொண்டாடி வருகிறோம். பண்டிகை நேரத்தில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜன.,13 முதல் 16ம் தேதி வரை ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு கொடுப்பது உள்ளிட்ட சில சிக்கல் இருப்பதால் பண்டிகை நேரத்தில் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். மக்கள் நலன் கருதியே ரசிகர்கள் பொறுத்துக் கொள்வர்’’ என்றனர்.