தமிழ் சினிமா

முண்டாசுப்பட்டி 2ம் பாகம்: புதிய முயற்சியில் தயாரிப்பு நிறுவனம்

ஸ்கிரீனன்

மக்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்ற 'முண்டாசுப்பட்டி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் பணியில் இறங்கியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

விஷ்ணு விஷால், நந்திதா, காளி, ராமதாஸ் (முனீஸ்காந்த்) உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'முண்டாசுப்பட்டி' படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர் ராம் குமார். சி.வி.குமார் தயாரித்த இப்படத்தினை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டது.

இப்படம் மக்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது 'முண்டாசுப்பட்டி' இரண்டாம் பாகத்தை உருவாகும் பணியில் இறங்கி இருக்கிறது தயாரிப்பு நிறுவனமான திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்.

"'முண்டாசுப்பட்டி' படத்தைப் போன்று சுவராசியமான மூடநம்பிக்கையை பின்னணியாக கொண்ட திரைக்கதையை வரவேற்கிறோம். அதனை படமாக பண்ணுவது மட்டுமன்றி, திரைக்கதையை அளிப்பவருக்கு பணப் பரிசு அளிக்கப்படும்" என்று திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 'முண்டாசுப்பட்டி' 2ம் பாகத்திற்கான பணிகளைத் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT