இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் பெரும்பாலானவை பாடல் கேட்பவர்களின் மனதுக்கு ஆறுதல் அளிப்பவை. அவரது பல பாடல்களை எந்தச் சூழலில் கேட்டாலும் மனதோடு இழையோடும் தன்மைக் கொண்டவை. அத்தருணங்களில் ராஜாவின் இசைகேற்ப காற்று வீசும் திசையெங்கும் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் எடையைவிட லேசாகிவிடும் மனது. அதுபோன்ற அற்புதங்களை தனது நிகரற்ற இசையால் மீண்டும் மீண்டும் செய்து கொண்டேயிருப்பவர் இளையராஜா என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
திரைப்படங்களில் அதிகபட்சம் ஒரு 5 நிமிடம் வரக்கூடியவையே பாடல்கள். அதை காலங்கடந்து தலைமுறைகள் தாண்டி ரசிக்க வைக்க அசாத்தியத்துடன் கூடிய பிரமிக்கத்தக்க இசை ஞானமும், செறிவும் தேவை என்பதை இசைஞானி தனது ஒவ்வொரு பாடலிலும் நிகழ்த்திக் காட்டியிருப்பார். குறைவான வசதிகள், திறமையான இசை கலைஞர்களை வைத்துக்கொண்டு இளையராஜா உருவாக்கியிருக்கும் பாடல்கள் அனைத்துமே அவரது பாடலைக் கேட்பவர்களின் ஜீவனில் ஜீவித்திருக்கின்றன.
கடந்த 1982-ம் ஆண்டு, இசைஞானியின் சகோதரரும், பாடலாசிரியரும், இயக்குநருமான கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கோழி கூவுது. இந்தப் படத்தில் வரும் 'பூவே இளைய பூவே' பாடலைக் கேட்கும்போதெல்லாம் , பாடல் கேட்பவர்களுக்கேத் தெரியாமல் அவர்களது அகத்தை குளிரச் செய்திருப்பார் இசைஞானி. இந்தப் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுத, ராஜாவின் உற்றத் தோழனும் யாருக்குமே அவ்வளவு எளிதில் வாய்த்திடாத குரலுக்குச் சொந்தக்காரருமான மறைந்த மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார்.
கிட்டத்தட்ட 41 வருடத்துக்கு முன், தொழில்நுட்ப வசதிகள் பெரிதாக இல்லாத காலக்கட்டம். இந்தப் படமும் கிராமத்து சப்ஜெக்ட். இன்னொரு முக்கியமான விஷயம், படத்தின் லீட் ரோலில் வருபவர்களுக்கான பாடலும் இல்லை. அப்படியிருந்தும்கூட இந்தப் பாடல் ஆண்டு வளையங்களைச் சுமந்து நிற்கும் மரங்களைப் போல் பாடல் கேட்பவர்களின் மனதில் வேர் பரப்பி நிற்பதற்கு ராஜாவின் உன்னதமான இசையே காரணம்.
இந்தப் பாடல் ஒரு காதல் கடிதத்தைப் படித்துக்காட்டுவது போல் தொடங்கும். கடிதத்தின் வரிகளைப் படித்த முடித்த கனத்தில் மலேசியா வாசுதேவன், "பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மலர் மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே எனக்குத் தானே"
என்று பல்லவியை பாடியிருப்பார்.
"பூவே இளையபூவே" என்ற இரு சொற்களைப் பிரித்துப் பாடும் இடைவெளியில் ஸ்ட்ரிங்ஸ் (சந்தூர், கிடார் ) இசைக்கப்பட்டிருக்கும். அந்த இசை படர்ந்து விரிந்த பெரிதான பச்சை இலையின் மேல்பட்டுத் தெரிக்கும் நீர்த்துளிபோல் பாடல் கேட்பவர்களின் மேல் தெளிக்கும். "வரம்தரும் வசந்தமே" என்ற இரு சொற்களைப் பிரித்துப் பாடும் இடைவெளியில் வயலின்கள் பல கிலோமீட்டர் பயணித்துவந்த ஆறு கடலில் கலப்பதைப் போல் சேரும். "மலர் மீது தேங்கும் தேனே" எனப் பாடும்போது பேக்கப்பில் வரும் கிடார் நம் தலைகோதி வருடும்.
"எனக்குத் தானே எனக்குத் தானே" என்ற இடம் வரும்போது ட்ரம்ஸ் தாளத்துடன் எல்லாம்சேரும், அதில் புல்லாங்குழலும் தனது வரவை உறுதி செய்திருக்கும். இவையெல்லாம் சேர்ந்து நிகழ்த்தும் ஜாலங்களில் நம் மனது முழுவதும் வானவில் பூத்திருக்கும். மீண்டும் அந்த பல்லவியை பாடவைத்து இசைக்கருவிகளின் உராய்வுகள் இல்லாமல் பாடல் கேட்பவர்களின் உயிருக்குள் நுழைந்திருப்பார் ராகதேவன்.
முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசையை கோரஸ் மூலம் தொடங்கும். லல்லலா .... லல்லலா எனும் லல்லபி ஒரு மேற்கத்திய சாயலில் அமைக்கப்பட்டிருக்கும். கோரஸ் குரல்களுக்கு இணையாக சந்தூர், கீபோர்ட், கிடார், டிரம்ஸ் ரிதத்துடன் சேர்ந்து பாடல் கேட்பவர்களை காவலும் கதவுகளுமற்ற கனவு சோலைக்குள் இழுத்துச் செல்ல, மெல்லிய காற்றாய் பின்தொடரும் வயலின்கள் தென்றல்போல் தாலாட்டி இமைகளை இறுக செய்யும் அந்த விநாடியில் முதல் சரணம் தொடங்கியிருக்கும்.
மனதுக்குப் பிடித்த பெண் குறித்து எழுதும்போது அதில் கொஞ்சமும் குறை வைக்கக்கூடாது என்பதை பாடல் கேட்பவர்களுக்கு எப்போதும் உணர்த்தும் வகையில், முதல் சரணத்தை,
"குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
விழி இரண்டு கடலானதே
எனது மனம் படகானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்த்ததே
இனிக்கும் தேனே எனக்கு தானே" என்று எழுதியிருப்பார் கவிஞர் வைரமுத்து. அதிலும் காதலியின் இரண்டு கண்களை கடலாக்கி, காதலனின் மனதை அதில் தவழும் படகாக்கியிருக்கும் வரிகள் எல்லாம் நினைவைச் செதுக்கும் அபாரமான கற்பனை.
ஒரு தொலைதூர பயணத்துக்குப்பின் தூரத்தில் தெரியும் நீர்வீழ்ச்சியை நோக்கி நெருங்கிச் செல்வது மனதுக்கு எத்தகைய சுகத்தை தருமோ அதைத்தான் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இப்பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசை பாடல் கேட்பவர்களுக்கு தந்திருக்கும். அதுவும் அந்த வயலினும் புல்லாங்குழலும் ஒன்றையொன்று கொஞ்சிக் கொள்வது போல இசையமைக்கப்பட்டிருக்கும் விதமெல்லாம் இசைஞானி இளையராஜாவால் மட்டுமே சாத்தியமானவை. புல்லாங்குழலிசையில் வரும் குளிர்ந்த காற்றைக்கொண்டு இறுக்கி கட்டப்பட்ட வயலின் கம்பிகளில் ஈரம் சொட்டச் செய்திருப்பார் ராகதேவன் இளையராஜா. இந்த இடையிசையின் இறுதியில் கோரஸ் சிங்கர்ஸின் குரலில் வரும் ஆஆஆஆஆ.... ஆஆஆஆ என்ற கோரஸ் அந்த இடத்தில் அத்தனை கச்சிதமாகப் பொருந்தியிருக்கும்.
பாடலின் இரண்டாவது சரணத்தை,
"இளஞ்சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசையானது
குயில் மகளின் குரலானது
இருதயத்தில் மழை தூவுது
இரு புருவம் இரவானது
இருந்தும் என்ன வெயில் காயுது
இனிக்கும் தேனே எனக்கு தானே" என்று தனது வைர வரிகளால் நிறைத்திருப்பார் வைரமுத்து. அதுவும், அவளது குயில் போன்ற குரலை இதயத்தில் தூவும் மழையாக்கி ரசிப்பதையும், இரவைப் போல் குளிர்ந்திருக்க வேண்டிய அவளது இரு புருவங்களும் வெயில் காய்வதாக எழுதியிருப்பதையும் பார்த்து கவிதைக்கே வெட்கத்தில் காதல் வந்திருக்கும்.
இந்த இரண்டு சரணங்களிலுமே, முதல் 5 வரிகளின் போது வரும் சிறுசிறு இடைவெளிகளில் சந்தூர் இசைக்கப்ட்டிருக்கும். இதுமட்டுமின்றி பாடலின் இரண்டு சரணங்களிலும்
தபேலா அற்புதமாக இசைக்கப்பட்டிருக்கும். இதற்குமுன் எத்தனையோமுறை கேட்டிருந்தாலும், இப்போது கேட்டாலும் பாடல் கேட்பவர்களைத் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்ட மேஸ்ட்ரோவின் மாஸ்டர் பீஸ் பாடல்களின் வரிசையில் இந்தப் பாடல் நிச்சயம் இருக்கும். ஞானதேவனின் தேவகான துரத்தல் தொடரும்.
முந்தைய அத்தியாயம்: இளையராஜாவுடன் இசையிரவு 23 | ‘இளமை இதோ இதோ...’ - ஊர் போற்றவே பேர் வாங்கும் பாடல்!