எனது கேள்வி, கோடிக்கணக்கான மக்களுடைய கேள்வி என ஜெயலலிதா மறைவு குறித்து மோடிக்கு கடிதம் எழுதியதன் பின்னணியை கவுதமி விளக்கியுள்ளார்.
காலெஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து, பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தை தனது அதிகாரபூர்வ வலைப்பூ பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் ஜெயலலிதாவின் திடீர் மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அக்கடித்ததை படிக்க. >(ஜெயலலிதாவைச் சுற்றி ஏன் இத்தனை ரகசியங்கள்?- மோடிக்கு கவுதமி கடிதம்). கவுதமியின் இக்கடிதம் சமூகவலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இக்கடிதம் குறித்து கவுதமி அளித்துள்ள பேட்டியில், "கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு என்ன நடந்தது என்பதை பொதுமக்களாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் ஆர்வம் மட்டுமல்ல உரிமையும் இருக்கிறது. 'என்ன நடந்தது?' என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், என்னாச்சு, என்னப் பண்ணலாம் என்ற ஆர்வம் இருக்கும். ஒரு தலைவருக்கு இந்த மாதிரி ஆகியிருக்கிறது என்றால், எவ்வளவு பெரிய ஆர்வம் இருக்கும்.
இப்போது நான் கேட்டிருக்கும் கேள்வி, என்னுடையது மட்டுமல்ல. கோடிக்கணக்கான மக்களுடைய கேள்வி. யார் என்ன பண்ணியிருப்பார்கள் என்ற விஷயத்தை எல்லாம் நான் பேசவில்லை. நான் சந்தேகம் என்ற வார்த்தையை அக்கடிதத்தில் கொண்டுவரவில்லை. ஏன், எப்படி என பல கேள்விகள் இருக்கிறது. இது ஒருவித அக்கறை தான்.
மாநிலத்தை மீறி நாம் கேட்கக் கூடிய அதிகாரம் இருக்கிறது என்றால் அது மத்திய அரசு தான். அங்கு பிரதமர் தான் முக்கியமானவர். நான் எதற்கு அவரிடம் கேட்டிருக்கிறேன் என்றால், தொடக்கத்தில் இருந்தே நான் மக்களில் ஒருவன் என்று கூறிவருகிறார். யார் வேண்டுமானாலும் எனக்கு கடிதம் எழுதலாம், அதற்கு பதில் கொடுப்பேன் என்று ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அதைக் கேட்ட போதிலிருந்தே இந்தியாவில் இப்படி ஒரு தலைவரா என்ற பெருமை எனக்கு இருந்திருக்கிறது.
இந்த கேள்விகள் அனைவரது மனதிலும் இருக்கிறது என்று தோன்றும் போது அவரிடம் தானே கேட்க முடியும். இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என நம்புகிறேன். இதை எழுதியவுடன் பலரும் பாராட்டினார்கள். அப்போது தான் அனைவரது குரலாக நாம் எழுதியிருக்கிறோம் என சந்தோஷப்பட்டேன். நமக்கு கேள்விக் கேட்க வேண்டிய உரிமையும், தர்மமும் இருக்கிறது.
எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை. திரையுலகில் அறிமுகமானதில் இருந்து, எந்த ஒரு ரகசியமுமின்றி வெளிப்படையாக இருக்கிறேன். தற்போது எனக்கு கையில் நிறைய பொறுப்புகள் இருக்கிறது. அதற்கே நேரம் சரியாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார் கவுதமி.