'சி 3' வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து விஷாலின் 'கத்தி சண்டை', டிசம்பர் 23ம் தேதி வெளியாக இருக்கிறது.
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, ஜெகபதிபாபு, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கத்தி சண்டை'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை விநியோகம் செய்கிறது.
தணிக்கையில் ஒரு சில காட்சிகளை மட்டும் நீக்கச் சொல்லி, 'யு' சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வெளியீட்டு தேதியை மாற்றிக் கொண்டே வந்தது. இறுதியாக 2017-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்தார்கள்.
தற்போது எதிர்பாராத விதமாக 'சி 3' டிசம்பர் 23ம் தேதி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது. இதனை 'கத்தி சண்டை' படக்குழு தங்களுக்கு சாதகமாக்கி, டிசம்பர் 23ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இதனை விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.