நடிப்பு, ஒன்றிலிருந்து தன்னை வேறொன்றாக மாற்றுவது. ஒரு குடுவையில் இருந்து தண்ணீர் அருந்துவது போல அத்தனை எளிதானதல்ல அது. தன் சொந்த இயல்பை, தனக்குத் தெரியாத கதாபாத்திரக் கனவுக்குள் புகுத்தும் கலை அது. அதில், தங்களை நிரூபித்திருக்கிற நடிகர்களில் முக்கியமானவர், வேல ராமமூர்த்தி. ‘பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்’ எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் இந்த பெருநாழி எழுத்தாளர், படப்பிடிப்பு ஒன்றுக்காகச் சென்னை வந்திருந்தார்.
எந்த கதாபாத்திரத்துலயும் இயல்பா பொருந்திடறீங்களே எப்படி?
அதுக்கு, என் எழுத்துக்கள்தான் காரணம். என் படைப்புகள்ல வர்ற ஒவ்வொரு கேரக்டரையும் நானே வாழ்ந்துதான் எழுதியிருக்கேன். ஒருகொலைகாரனா கூட, நான்தான் இருந்திருப்பேன். அடிக்கிறவனாகவும் அடி வாங்குறவனாகவும் நானே இருந்திருக்கேன். அதனால, திரை கதாபாத்திரங்களுக்குள்ள ஊடுருவறது எளிதா இருக்கு. அதே நேரம் எழுத்தாள மனநிலை, எனக்குள்ளிருக்கிற நடிகனை இன்னும் மெருகூட்டுது. அதை என் பலமா நினைக்கிறேன்.
எழுத்தாளரா இருக்கறதால, இயக்குநர்கள் கதை சொல்லும்போது, அதுல மாற்றங்கள் கூற தோனுமே?
அப்படியில்லை. யார் கதை சொன்னாலும் அது அவங்க படைப்பு. நான் என் கதைகள்ல எப்படி வாழறேனோ, அவங்க, அவங்க கதைகள்ல அப்படி வாழ்ந்திருப்பாங்க. அதுல என் கருத்தைச் சொல்லவே மாட்டேன். அது என் வேலையும் இல்லை. அங்க, நான் நடிகன் மட்டும்தான். நெருங்கிய நண்பர்கள் படம் இயக்கினாலும் அதைச் செய்யமாட்டேன்.
பொதுவா, ஒரு துறையில கவனிக்கப்பட்டவங்க, மற்ற துறையில பிரபலமாவதில்லை. நீங்க எழுத்து, நடிப்பு இரண்டிலும் முத்திரைப் பதிச்சிருக்கீங்கன்னு சொல்லலாமா?
பிற துறைகள்ல பிரபலமா இருக்கிறவங்களை சினிமா இழுக்கும். அவங்களைப் பயன்படுத்த நினைக்கும். அது இயல்புதான். மத்தவங்களைப் பற்றி எனக்குத் தெரியலை. ஆனா, எழுத்தாளன் அப்படிங்கற முறையில ‘மதயானைக் கூட்டம்’படத்துல வாய்ப்பு கிடைச்சாலும், அடுத்தடுத்தபடங்கள்லயும் என்னை நான் நிரூபிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். ஆனா, முத்திரைப் பதிச்சிருக்கேனா, இல்லையான்னு மத்தவங்கதான் சொல்லணும்.
உங்க ‘குற்றப்பரம்பரை’ வெப் தொடரா ஆகுதுன்னு சொன்னாங்களே?
ஆமா. சினிமாவாக்க நடந்த முயற்சி தள்ளிப்போச்சு. அதனால, ஹாட் ஸ்டார்ல வெப் தொடரா வரப்போகுது. மொத்தம் 2 சீசன். முதல் சீசன்ல 10 எபிசோட். எழுதிக் கொடுத்துட்டேன். அதிகாரபூர்வமா அவங்களே அறிவிப்பாங்கன்னு நினைக்கிறேன்.
கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவா நடிக்கிறீங்களாமே?
‘ராஜவம்சம்’ கதிர்வேலு இயக்குற படத்துல நடிக்கிறேன். இதுவரை நான் நடிச்ச எல்லா படங்கள்லயும் கம்பீரமா, பல படங்கள்ல கொஞ்சம் வில்லத்தனமான பார்வையோட வர்ற மாதிரியான கேரக்டர்தான் அமைஞ்சிருக்கு. முதன் முறையா அந்த அகங்காரத்தைக் குறைச்சு, அமைதியான மனம் கொண்டவரா விரும்பி நடிச்சிருக்கேன். அவர் பெயரை நேரடியா படத்துல பயன்படுத்தலன்னாலும் அந்த பாத்திரத்துக்கு என் இயல்பை மாற்றி நடிச்சது வித்தியாசமா இருந்தது. படப்பிடிப்பு முடிஞ்சும், தொடர்ந்து சில நாட்கள் அந்த கேரக்டராவே நான் மாறி இருந்தது, எனக்கே ஆச்சரியம் தான்.
படம் இயக்கறதா சொல்லியிருந்தீங்களே?
என் ‘அரியநாச்சி’ நாவலை, இயக்கறதா இருந்தேன். நடிப்புல கொஞ்சம் பிசியா இருக்கிறதால அதை வேற ஒரு ஓடிடி தளத்துக்கு கொடுத்துட்டேன். அதை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்க இருக்கிறார். அதுவும் ரத்தமும் சதையுமான மண்சார்ந்த படமா இருக்கும்.
நடிகரா அறிமுகமாகி 9 வருஷமாச்சு. சினிமாவும் நடிப்பும் திருப்தியா இருக்கா?
கண்டிப்பா. உலக பெரும்பணக்கார தொழிலதிபர் ஒருத்தர், தெருவுல நடந்து போறார்னா, ‘அப்படியா?’ன்னு கண்டுக்காம போயிருவாங்க. ஆனா, ஒரு நடிகன் அதே தெருவுல போறான்னா, சாதி, மதம், இனம், மொழி, பாலின பேதமில்லாம எல்லாரும் அவனை பார்க்க, பேச வர்றாங்க. புகைப்படம் எடுக்கிறாங்க. இது வேற யாருக்கு கிடைக்கும்? தமிழ்நாட்டுல மட்டுமில்ல, வெளிநாடுகள்லயும் இந்த மரியாதை கிடைக்குது. அதனால மகிழ்ச்சியா இருக்கு. அது மட்டுமில்லாம, சினிமாவை வருமானத்துக்கான விஷயமாகவோ, புகழுக்கான விஷயமாகவோ நான் பார்க்கலை. இராணுவத்துல வேலை பார்த்தவன், பிறகு அஞ்சல் துறையில இருந்தேன். ஓய்வு பெற்ற பிறகு என் 60 வயசுலதான் நடிக்க வாய்ப்பு வந்தது. இது யாருக்கும் கிடைக்காத விஷயம். ஓய்வு பெற்ற காலத்துல நான் விரும்பிய துறை கிடைச்சிருக்கு. என் பயணம், நித்தம் ஒரு புது கதாபாத்திரத்தோட கலங்காத நதி போல போய்கிட்டு இருக்கு. அதில் அழகாகவும் ஆழமாகவும் நீந்தியபடி இருக்கிறேன்.