சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான Soul of Varisu பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. முன்னதாக, ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’ பாடல் வெளியாகி இருந்தது.
தமிழ்த் திரை உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். அவர் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கி உள்ளார். படத்திற்கான வசனத்தை விவேக் எழுதி உள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிடுகிறது.
இந்தப் படத்தில் ராஷ்மிகா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது வெளியாகி உள்ள இந்த ‘அம்மா’ பாடலை சித்ரா பாடியுள்ளார். விவேக் எழுதி உள்ளார். சித்ராவின் குரலில் மனதுக்கு இதமான பாடலாக வெளிவந்துள்ளது ‘Soul of Varisu’ பாடல்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகனை சந்திக்கும் தாயின் மன ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பாடலின் வரிகள் உள்ளன. அதை வைத்துப் பார்க்கும்போது இந்தப் பாடல் ‘வாரிசு’ படத்தின் மையக் கருவில் முக்கிய அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.