தமிழ் சினிமா

''வேடிக்கையான ட்ரோல்களை ரசித்தேன்'' - 'காசேதான் கடவுளடா' பாடல் குறித்து மஞ்சுவாரியர்

செய்திப்பிரிவு

அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘காசேதான் கடவுளடா’ வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த மாதம் 9-ம் தேதி வெளியானது. இந்நிலையில் நேற்று படத்தின் இரண்டாவது பாடலான ‘காசே தான் கடவுளடா’ பாடல் வெளியாகியுள்ளது.

அஜித் ரசிகர்கள் இதனை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடலை வைசாகன் என்பவர் எழுதிப்பாடியுள்ளார். இந்தப்பாடலில் மஞ்சுவாரியர் இணைந்து பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் குரல் கோரஸில் மறைந்திருப்பதை உணர முடிகிறது. இதையடுத்து மஞ்சுவாரியர் குறித்த ட்ரோல்கள் அதிகரித்துள்ளன. இந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பதிவை நடிகை மஞ்சுவாரியர் வெளியிட்டுள்ளார்.

அதில், "துணிவு படத்தின் 'காசேதான் கடவுளடா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலில் எனது குரல் கேட்கவில்லையே என்று கவலைப்படுபவர்களின் கவனத்திற்கு, கவலைப்படாதீர்கள், பாடலின் வீடியோ வெர்ஷனுக்காக எனது குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் அனைவரது அக்கறைக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னைக் குறித்த வேடிக்கை மிகுந்த ட்ரோல்களை ரசித்தேன். அனைவருக்கும் என் அன்பு" என்று பதிவிட்டுள்ளார் மஞ்சுவாரியர்.

SCROLL FOR NEXT