மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வந்த 'காற்று வெளியிடை' படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவுற்றது.
கார்த்தி, அதிதி ராவ், ஷரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் 'காற்று வெளியிடை'. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டி, சென்னை, காஷ்மீர் மற்றும் லடாக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. காஷ்மீர் மற்றும் லடாக்கில் கார்த்தியை வைத்து படத்தின் பிரதான இடத்தில் வரும் சண்டைக் காட்சியை படமாக்கி இருக்கிறார்கள். 'குரு' படத்துக்குப் பிறகு 'காற்று வெளியிடை' படத்துக்காக ஐரோப்பாவில் ஒரு பாடலை படமாக்கியுள்ளார் மணிரத்னம்.
தற்போது இப்படத்தின் அனைத்து காட்சிகள் மற்றும் பாடல்களின் படப்பிடிப்பும் முடிவுற்று இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. மார்ச் 2017-ல் இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து, 'சதுரங்க வேட்டை' வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் கார்த்தி.