பல்கேரியாவில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே சிவா - அஜித் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
'வீரம்', 'வேதாளம்' படக் கூட்டணியான அஜித் - சிவா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். வில்லனாக விவேக் ஒபராய் நடித்து வருகிறார்.
வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. தற்போது மீண்டும் பல்கேரியாவில் முக்கியமான காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறது படக்குழு.
இதில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஒபராய் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் கலந்து கொண்டனர். விவேக் ஒபராய் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பல்கேரியாவில் கடும் பனிப்பொழிவு இருப்பதாகவும், அஜித் மற்றும் படக்குழுவினருக்கு உங்களுடைய அன்பு தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
பல்கேரியா படப்பிடிப்பைத் தொடர்ந்து, மீண்டும் ஹைதராபாத்தில் சில காட்சிகளை படமாக்கவிருக்கிறார்கள். இப்படத்தின் தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மேலும், ஏப்ரலில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.