சற்குணம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் நாயகனாக மாதவன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
2015-ம் ஆண்டு பாலா தயாரிப்பில் அதர்வா நடித்த 'சண்டி வீரன்' படத்தை இயக்கினார் சற்குணம். அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
சில நாட்களாக 'களவாணி' படத்தின் 2-ம் பாகத்தில் மீண்டும் சற்குணம் - விமல் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சற்குணம், "என்னுடைய அடுத்த படமாக ’களவாணி’ இரண்டாம் பாகத்தை நான் இயக்கக் போவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது, நான் அடுத்து மாதவனை வைத்து தான் படம் இயக்கப் போகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் மாதவன் - சற்குணம் இணைவது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தில் மாதவனுடன் யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள், தயாரிப்பாளர் யார் என்பது உள்ளிட்ட எந்தவொரு தகவலையும் சற்குணம் வெளியிடவில்லை.