'ஹஷ்' படத்தின் பிரதான கதாபாத்திரத்தின் சாயல் இருக்கும். மற்றபடி 'கொலையுதிர் காலம்' படத்தின் கதைக்கு சம்பந்தமில்லை என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் படம் 'கொலையுதிர் காலம்'. யுவன் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்க உள்ளது. ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படமான 'ஹஷ்' படப் பின்னணியைக் கொண்டு உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர் வீட்டில் தனியாக இருக்கும் போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவரிடமிருந்து தப்பித்தாரா என்பது தான் 'ஹஷ்' திரைக்கதை.
இச்செய்திக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது. "'ஹஷ்' படத்தின் பிரதான கதாபாத்திரத்தின் சாயல், 'கொலையுதிர் காலம்' படத்தின் பிரதான கதாபாத்திரத்திலும் இருக்கும். மற்றபடி 'ஹஷ்' படத்துக்கும் எங்களது படத்துக்கும் சம்பந்தமில்லை.
மேலும், சுஜாதாவின் 'கொலையுதிர் காலம்' நாவலை மையப்படுத்தி எடுக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். அந்த தலைப்பு நன்றாக இருந்தது. அத்தலைப்பு இக்கதைக்கு நன்றாக இருக்குமோ என்று கேட்டோம், தலைப்பும் இருந்தது" என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
சக்ரி டோலட்டியோடு இரண்டு ஹாலிவுட் எழுத்தாளர்களும் இப்படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது நயன்தாராவுடன் நடிக்கும் இதர நடிகர், நடிகைகளை இறுதி செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக உள்ளது.