’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படம் பற்றி இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாபிட் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கோவா சர்வதேச திரைப்பட போட்டிக்கான தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53-வது சர்வதேச திரைப்பட விழா திங்கள்கிழமையுடன் (நவம்பர் 28) நிறைவடைந்தது. இதில் சர்வதேச போட்டிக்கான தேர்வுக் குழுவிற்கு இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாபிட் தலைமை ஏற்றார்.
நிறைவு விழாவில் பேசிய அவர், "வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரசார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். இது பரவலாக விவாதப் பொருளானது.
இந்நிலையில் தேர்வுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சுதிப்தோ சென் ஐஎஃப்எஃப்ஐ தேர்வுக் குழு தலைவர் நாடவ் லாபிட் விமர்சனம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், "விழா மேடையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பற்றி தேர்வுக் குழுத் தலைவர் லாபிட் கூறிய அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்து. தேர்வுக் குழுவில் மொத்த நான்கு நடுவர்கள் இருந்தோம். அவர்களில் ஒரு பெண் நடுவர் தனிப்பட்ட சூழல் காரணமாக கிளம்பிட எஞ்சியிருந்தோர் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டோம். அப்போது நாங்கள் எங்கள் விருப்பு, வெறுப்பு பற்றி ஏதும் பேசவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கோவா சர்வதேச திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒரு தரப்பான பிஐபியின் இயக்குநர் மோயின்தீபா முகர்ஜி அளித்த பேட்டியில், "தேர்வுக்குழு தலைவருக்கு அவரது கருத்துகளை தெரிவிக்கும் சுதந்திரம் இருக்கிறது. திரைப்பட திருவிழா என்றால் அதில் எல்லாவிதமான படமும் இடம்பெறும் உரிமையும் இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அந்த திரைப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், "காலை வணக்கம். உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும். #CreativeConsciousness " என்று பதிவிட்டுள்ளார்.