அன்பு, வம்பு, நட்பு, கிரிக்கெட் என்று தீராத விளையாட்டுப் பிள்ளைகளாக திரியும் நண்பர்கள், திருமணத்துக்குப் பிறகு என்ன ஆகிறார்கள் என்பதே 'சென்னை 28 பாகம் 2' .
சென்னை ஷார்க்ஸ் அணியின் சார்பில் கிரிக்கெட் ஆடிய நண்பர்கள் குழு, தேனியில் நடக்க உள்ள ஜெய்யின் திருமணத்துக்கு குடும்பத்துடன் புறப்படுகிறது. அங்கு ஒரு சவாலைச் சந்திக்க வேண்டிய சூழல் நேரிடுகிறது. அது என்ன சவால், அதன் விளைவுகள் என்ன, ஜெய்க்கு திருமணம் நடந்ததா? ஆகியவை வெள்ளித்திரையில் விரிகிறது.
'சென்னை 28'ல் இயக்குநராக முதல் இன்னிங்ஸ் ஆரம்பித்த வெங்கட் பிரபு தற்போது 9 வருடங்களுக்குப் பிறகு 2-வது இன்னிங்ஸை படமாக எடுத்திருக்கிறார். முதல் பாகத்தில் இருந்த நாயகர்களையே இதிலும் நடிக்க வைத்திருப்பது சிறப்பு.
சிவா, ஜெய், நிதின் சத்யா, பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், விஜயலட்சுமி, வைபவ் என எல்லோரும் தங்கள் கதாபாத்திரம் உணர்ந்து நிறைவான பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிவாவின் ஒவ்வொரு கவுன்டர் வசனத்துக்கும் அப்ளாஸ் குவிகிறது. 'அவ்ளோ நேரமா ஒரே கியர்ல வர்றான்', 'அஞ்சு நிமிஷம் பேசி கன்வின்ஸ் பண்ணலாம்னு பார்த்தா, தேவையே இல்லாம 5 மணி நேரம் பேசுறாங்க', 'சச்சினுக்கு முடிவெட்டுற ஒரே காரணத்துக்காக சும்மா விடுறேன்' என சிவா பேசும் போது தியேட்டரில் சிரிப்பு மட்டுமே தெறிக்கிறது.
கெத்து காட்டுவதற்காக உதார் விடும் உள்ளூர் பிரமுகர் கதாபாத்திரத்தில் வைபவ் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜெய்யின் வழக்கமும் பழக்கமுமான வெகுளித்தனம் படத்துக்கும், கதாபாத்திரத்துக்கும் பயன்பட்டிருக்கிறது. நாயகி சனா உல்தஃப் நடிப்பதற்கு போதுமான ஸ்கோப் இல்லை.
அமைதியாக இருந்து 'வெடிக்கும்' நிதின் சத்யா, 'சொதப்பல்' பிரேம்ஜி அமரன், 'உல்டா' அஜய் ராஜ், சர்ப்ரைஸ் இனிகோவின் வருகை, கறார் விஜயலட்சுமி ஆகியோர் படத்தின் சுவாரஸ்யத்துக்கு உதவுகிறார்கள். டி.சிவா, சுப்பு பஞ்சு, மஹத், அர்விந்த், சந்தான பாரதி , படவா கோபி ஆகியோர் பொருத்தமான தேர்வு.
ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், பின்னணியும் படத்துக்கு கூடுதல் பலம். சொப்பன சுந்தரி பாடல் மட்டுமே ரசிக்க வைக்கிறது. ஹவுஸ் பார்ட்டி பாடல் துருத்திக் கொண்டு நிற்கிறது. நேர்த்தியான எடிட்டிங் மூலம் பிரவீன் கவன ஈர்ப்பை ஏற்படுத்துகிறார்.
முதல் பாகத்தில் இருந்த லீடுக்கு வலு கொடுக்கும் விதமாக ஹரி பிரசாத்தின் கிரிக்கெட் வருகையை கொடுத்த இயக்குநரின் புத்திசாலித்தனம் பாராட்டத்தக்கது. வீடியோ வடிவில் சினிமா விமர்சனம் செய்யும் விமர்சகர்களை சட்டையர் காமெடியில் கலாய்த்த விதம், படவா கோபியின் கிரிக்கெட் வர்ணனை, ரூபாய் நோட்டு உத்தி அப்டேட் என படம் முழுக்க ரசனை.
ஆனால், பிரச்சினையின் நதிமூலம், ரிஷிமூலமான சொப்பன சுந்தரியை ஹீரோ அண்ட் கோ தேடாதது ஏன்? அந்தப் பழியை துடைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் ஃபீல் பண்ணுவதும், கிரிக்கெட் ஃபிலிம் காட்டுவது ஏன் என்ற கேள்விகள் மட்டும் நீள்வதை தவிர்க்க முடியவில்லை.
இதைத் தவிர்த்துப் பார்த்தால் 'சென்னை 28 பாகம் 2' கலகலப்புக்கு உத்தரவாதம்.