தமிழ் சினிமா

பட்டத்து அரசன்: திரை விமர்சனம்

செய்திப்பிரிவு

முன்னாள் கபடி வீரரான பொத்தாரிக்கு (ராஜ்கிரண்), ஊரில் சிலை வைக்கும் அளவுக்கு மரியாதை. மகன்கள், பேரன்கள் என கூட்டு குடும்பமாக வாழும் அவருக்கும் அவர் பேரன் சின்னத்துரைக்கும் (அதர்வா) பேச்சுவார்த்தை இல்லை. ஏன் என்பதற்கு இருக்கிறது, 'பிளாஷ்பேக்'.

உள்ளூர் பொறாமைக்காரர்களின் சதியால் பொத்தாரியின் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட, கபடி வீரரான அவரின் மற்றொரு பேரன் செல்லையா (ராஜ் ஐயப்பா) தற்கொலை செய்கிறார். அந்த அவப்பெயரைக் களைந்து, தம்பியின் தற்கொலைக்குப் பின்னுள்ள காரணத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, பிரிந்த குடும்பத்தை சின்னத்துரை எப்படி ஒன்று சேர்க்கிறார் என்பதுதான் ‘பட்டத்து அரசன்’.

முன்னாள் கபடி வீரர், கூட்டுக்குடும்பம், அதற்குள் பிரச்னை, குடும்பத்தைச் சேர்க்க நினைக்கும் பேரன், வெற்றிலை விவசாயம் என முதல் பாதிகதை மெதுவாக நகர்ந்தாலும் ஏதோசொல்ல வருகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார், இயக்குநர் சற்குணம். ஆனால், இரண்டாம் பாதியில் நடக்கும் சக கபடி வீரரின் சதி, அவ்வப்போது வந்துபோகும் காதல் காட்சிகள், ஊரை எதிர்த்து நடக்கும் சவால் கபடி போட்டி என தொடரும் காட்சிகளில் ‘அப்புறம் இதுதானே’ என எளிதாக யூகித்துவிட கூடியதாக அமைந்திருக்கும் பலவீனமானத் திரைக்கதை, ஆயாசத்தை அள்ளிக் கொடுக்கிறது.

கிராமத்து இளைஞனாகக் கெத்தாகவந்து போகிறார், அதர்வா. அவர் உடல்மொழியும் நடிப்பும் கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்தாலும் படத்தின் கதைக்குப்பெரிதாக உதவவில்லை. ‘பொத்தாரி’யாக ராஜ்கிரண், ஒரு கிராமத்து முதியவரை அப்படியே அடையாளம் காட்டுகிறார். ஊர்க்காரர்களால் அவமானப்பட்டு கூனிக் குறுகி நிற்கும்போது, இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

நாயகி ஆஷிகா ரங்கநாத்துக்கு அதிகவேலையில்லை. அவருக்கும் அதர்வாவுக்குமான திணிக்கப்பட்ட காதல் காட்சிகள் ஒட்டவில்லை. துணை கதாபாத்திரங்களான ராஜ் ஐயப்பா, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, வில்லன் ரவிகாலே, சத்ரு, ராதிகா, பாலசரவணன் உட்பட அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

ஜிப்ரானின் பின்னணி இசையும் லோகநாதன் சீனிவாசனின் ஒளிப்பதிவும்கிளைமாக்ஸ் கபடி போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்க உதவி இருக்கிறது. ஆனால், ‘சீரியஸ்’ஆக போட்டி நடக்கும்போதே, அம்மன் சிலையில் இருந்து ராதிகா தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் நடத்துவது, கபடியில் வென்றஊர்க்காரர்கள், தோற்ற ஊருக்குள் ஊர்வலமாக பைக்கில் சென்று ‘உங்க ஊர்ல ஆம்பளை இருக்காங்களா?’என்று கேட்பது போன்ற பழமைக் காட்சிகள், காமெடிஅதிகம் இல்லாத குறையை கச்சிதமாகப் போக்குகின்றன.

‘நேட்டிவிட்டி’க்காக வெற்றிலை வயல்உள்ளிட்ட விஷயங்களில் மெனக்கெட்டவர்கள், புதிய காட்சிகளுக்கும் லாஜிக் விஷயங்களுக்கும் மெனக்கெட்டிருக்கலாம்.

SCROLL FOR NEXT