தமிழ் சினிமா

காரி Review: ஜல்லிக்கட்டுக் களமும் காட்சிகளும் காப்பாற்றினாலும்... மற்றவை?

கலிலுல்லா

ஜல்லிக்கட்டு போட்டிக்காக சென்னையிலிருந்து தன் சொந்த ஊருக்குச் செல்லும் ஒருவன், அதற்கான நோக்கத்தை நிறைவேற்றினானா, இல்லையா என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த காரியூர் மற்றும் சிவனேந்தல் இரண்டு கிராமங்களுக்கும் பொதுவான கோயிலாக கருப்பன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயில் நிர்வாகத்தை யார் நடத்துவது என்ற மோதல் வெடிக்க, ஜல்லிக்கட்டை நடத்தி, அதில் வெற்றிபெறும் கிராம மக்களே அதனை நடத்திக்கொள்ளலாம் என முடிவெடுக்கப்படுகிறது. போட்டிக்கான களம் சூடுபிடிக்க, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு காளைகளை அடக்க, காரியூரை பூர்விகமாக கொண்டு சென்னையில் வாழும் சேதுவை (சசிகுமார்) நாடுகிறார்கள் ஊர் பெரியவர்கள். இறுதியில் கோயில் நிர்வாகத்தை யார் கைப்பற்றியது, சேது ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு காளையை அடக்கினாரா என பல கேள்விகளுக்கு திரைக்கதை மூலம் பதில் சொல்லும் படம்தான் ‘காரி’.

ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளாய் சசிகுமாரும் கிராமத்துக் களமும் ‘கோந்து’ போல ஒட்டிக்கொண்டு திரை ஆக்கத்திற்கு அடர்த்தி கூட்டுகின்றன. சென்னை களம் அவருக்கு அந்நியமாக தோன்றுவதுடன் அதன் ஸ்லாங்கும் துருத்துகிறது. ‘ஆடுகளம்’ நரேன், ஜே.டி.சக்ரவர்த்தி, பாலாஜி சக்திவேல் நடிப்பில் குறைவைக்கவில்லை. ‘காரி’ காளை அல்லது கருப்பன் என அழைக்கப்படும் காளை மாடு ஒரு தனி கதாபாத்திரமாக திமிரும் விதம் அதற்கான காட்சிகள் ஈர்ப்பைக்கூட்டுகின்றன. அம்மு அபிராமி, ரெடின் கிங்க்ஸ்லி கதாபாத்திரங்கள் அப்பட்டமான திணிப்பை பளிச்சிடுகின்றன. அதேபோல, நாயகி பார்வதி அருண் அழுது புரண்டு நடிக்கும் காட்சி கவனம் பெற்றாலும், ஒட்டுமொத்த படமும், கதையும், அவரின் தேவையை எதிரொலிக்கவில்லை.

பொறுமையாக தனது பாய்ச்சலை நிகழ்த்தும் ‘காரி’யின் முதல் பாதி இலக்கின்றி அலைபாய்கிறது. மொத்தப் படமுமே கூட பல களங்களில் கால் பதிக்கிறது. உதாரணமாக ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட படம், ஜீவகாருண்யம், குதிரைப்பந்தயம், காளைமாடுகளை வைத்து நடக்கும் கார்ப்பரேட் வணிகம், சுற்றுச்சூழல் பிரச்சினை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என இத்தனையும் பேசியிருப்பது நோக்கமில்லாத அதன் இலக்கின் தடுமாற்றத்தை உணர வைக்கிறது.

அதேபோல, இரண்டு சவால்களை கொடுத்து நாயகனை திணறடித்தது மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கு இரண்டாவது சவாலை புரிந்துகொள்ள போராட வைத்திருப்பது அயற்சி. திணிக்கப்பட்ட காதல் காட்சியும், குழந்தை மீதான பாலியல் வன்முறை காட்சியும் எந்த வகையிலும் கதைக்கு உதவிபுரியாமல் தனித்து நிற்கிறது. அம்மு அபிராமி கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் எங்கிருந்து எதற்காக வந்தது? இறுதிக்காட்சியில் கலெக்டர் எங்கிருந்து வந்தார்? ரெடின் கிங்க்ஸ்லி இறுதியில் கால்ஷீட் முடித்து கிளம்பிவிட்டது என கன்டினியூட்டியும் சிக்கலே!

ஹேம்நாத் இயக்கியிருக்கும் இப்படத்தை தாங்கி பிடித்திருப்பது அதன் இறுதி 20 நிமிடங்களே. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவில் சீறிப்பாயும் காளைகள், தூக்கி வீசப்படும் வீரர்கள் புழுதி பறக்கும் ஆடுகளத்தின் காட்சிகள் ரசனைக்கு தீனி. டி.இமானின் பின்னணி இசையும், ஸ்லோமோஷனும் கலந்த ஜல்லிக்கட்டுக் களமும், காட்சிகளும் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நிற்கின்றன. படத்தின் ஆன்மாவுக்கான நியாயத்தை சேர்க்கும் இறுதிக்காட்சி சோர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கு டானிக்.

மொத்தத்தில் ‘காரி’ இரண்டாம் பாதியில் குறிப்பாக க்ளைமாக்ஸில் காட்டிய சீற்றத்தை படத்தின் தொடக்கம் முதலே காட்டத் தவறியதால் களம் சூடுபிடிக்கவில்லை. தவிர, இலக்கில்லாமல் பாய்ந்ததால் பதம் பார்க்கப்பட்டது திரைக்கதை மட்டுமல்ல..!

SCROLL FOR NEXT