சென்னை: படப்பிடிப்பு தளத்தில் அனுமதியின்றி யானையைப் பயன்படுத்திய புகாரைத் தொடர்ந்து, அதுகுறித்து விளக்கம் அளிக்க ‘வாரிசு’ படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்ப கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.
'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடல் வீடியோ அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவியது. இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை அருகே உள்ள தனியார் பொழுதுப்போக்கு பூங்காவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புத் தளத்திற்கு உரிய அனுமதி இல்லாமல், யானையை அழைத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டைத் தொடரந்து படப்பிடிப்புத் தளத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், யானையை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதி கடிதம் மட்டுமே படப்பிடிப்புக் குழுவிடம் இருப்பது தெரியவந்தது.
மேலும் படப்பிடிப்பில் யானையைப் பயன்படுத்துவதற்கான கடிதம் தங்களிடம் இருப்பதாக கூறிய படக்குழுவினர், அந்த அனுமதி கடிதத்தை காவல்துறையினரிடம் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், படத்தின் பூஜைக்காகவே யானை கொண்டு வரப்பட்டது என்றும், விரைவில் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ‘வாரிசு’ படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், படப்பிடிப்புத் தளத்தில் உரிய அனுமதியின்றி யானையைப் பயன்படுத்தியது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பண்டிகை நாட்களில் தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், ‘வாரிசு’ படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தி இருந்த நிலையில் தற்போது விலங்குகள் நல வாரியம் மூலம் புதிய பிரச்சினை உருவாகியுள்ளது.