தமிழ் சினிமா

பிறந்தநாளில் சமூக வலைதளங்களில் இணைந்த இசையமைப்பாளர் தேவா 

செய்திப்பிரிவு

இசையமைப்பாளர் தேவா தனது பிறந்த நாளையொட்டி இன்று ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரின் புதிய கணக்கை பலரும் பின்தொடர்கின்றனர்.

1986-ம் ஆண்டு வெளியான ‘மனசுகேத்த மன்னாரு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. ‘கானா’ பாடல்களில் தனித்துவம் பெற்று விளங்கிய தேவா மெலடி பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர். அஜித், விஜய் படங்கள் இவரின் இசையால் தனிகவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் இவர் பாடிய ‘ஜித்து ஜில்லாடி’ பாடல் மிகவும் பிரபலமானது. இவர் கடைசியாக 2021-ல் ‘சில்லு வண்டுகள்’ படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிறந்தநாளையொட்டி இன்று இசையமைப்பாளர் தேவா ட்விட்டரில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம்! இறுதியாக உங்கள் அனைவரையும் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நாளை நடக்கும் தேவா நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT