விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெற்றிருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் படத்தை இந்த நிறுவனம் வெளியிடுகிறது.
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கில் வெளியாகும் பைலிங்குவல் படமான இதனை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சார்பில், ஆந்திரா, தெலங்கானாவில் பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதை நினைவூட்டி தில் ராஜுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்ப பிரச்சினை வெடித்துள்ளது.
இந்த பிரச்சினை ஒருபுறம் இருக்க தற்போது இந்தப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெற்றிருக்கிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொங்கலன்று திரையில் வெளியாகும் அஜித்தின் ‘துணிவு’ படத்தை ரெட்ஜெய்ண்ட் தமிழ்நாட்டில் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.