தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுவுக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை லயோலா கல்லூரியில் வரும் 27-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கூட்டத்துக்கு தடை கோரி திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகரான எம்.ராஜேந்திரன், சென்னை மாவட்ட 11-வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘பொதுக்குழு தொடர்பாக அனைத்து உறுப்பினர்களுக்கும் 21 நாட்களுக்கு முன்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறைதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதுவும் செப்டம்பர் மாதத்துக்கு முன்பாக நடத்த வேண்டும். ஏற்கெனவே இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பொதுக்குழு நடத்தப்பட்டுள்ளது. ஆகவே, விதிமுறைகளை மீறி தற்போது பொதுக்குழுவைக் கூட்ட திட்டமிட்டுள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியுள்ளார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக நவம்பர் 25-ம் தேதிக்குள் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் அதன் பொதுச் செயலாளரான நடிகர் விஷால் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனு மீதான விசாரணையை 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.