'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் தன்னுடைய நிகழ்ச்சியைக் கிண்டல் செய்தததால், கடுமையான கேள்விகளை எழுப்பியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. கலவையான விமர்சனங்களைப் இப்படம் பெற்றிருந்தாலும், வசூலில் குறையில்லை என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஆனந்தி ஆகியோர் பங்கேற்ற 'பேசுவதெல்லாம் உண்மை' என்ற பெயரில் ஒரு காமெடி காட்சி ஒன்று இடம்பெறும். இக்காட்சி முழுக்க 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சியை கிண்டல் செய்து காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
இக்காட்சியமைப்புக்கு 'சொல்வதெல்லாம் உண்மை' தொகுப்பாளர் மற்றும் திரை இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார். அதில் "'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை கிண்டல் செய்பவர்கள் என்னுடைய 'அம்மணி' படத்தின் விமர்சனத்தை பார்க்கவும். வணிகரீதியில் வெற்றிபெறவில்லை என்றாலும் அந்த படம் எனக்கு மரியாதை தந்தது. சினிமாவின் மகத்துவத்தை புரிந்தவர்கள், அடுத்தவர்களை கிண்டல் செய்வது போல தரக்குறைவாக நடந்துகொள்வது வருத்தம் அளிக்கிறது.
சென்னை மழை வெள்ளத்தின் போது, ஆர்ஜே பாலாஜி உதவியதை விளம்பரத்துக்காகத்தான் என என்னால் கிண்டல் செய்ய முடியாதா? அப்படி செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன். அடுத்தவர்களின் முயற்சியை நான் மதிக்கிறேன். என்னுடைய அடுத்த படம் கூட `ரியல் லைஃப் ஹீரோவை’ பற்றியதுதான்.
சில இயக்குநர்கள் மது, அரியர், பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர தமிழ் இளைஞர்களுக்கு வேறு எதையும் கற்றுத்தரவில்லை. ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி 1000 தொடர்களை கடந்து செல்ல முடியும்? நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்கள் முட்டாள்கள் அல்ல" என்று காட்டமாக தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்ற ஜி.வி.பிரகாஷ்
லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சாடல் பதிவில் "என்னுடைய அடுத்த படத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்பு தருகிறேன். அதேபோல உங்களை பின்பற்றுபவர்களுக்கும் நல்லது செய்ய நீங்கள் தயாரா?" என்று கேட்டிருந்தார். அதற்கு "கண்டிப்பாக நீங்கள் கதையைக் கூறலாம். கதை நன்றாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நானும் 'காக்கா முட்டை', 'பரதேசி', 'ஆடுகளம்' போன்ற படங்களில் பணியாற்றியவன்தான்" என்று ஜி.வி.பிரகாஷ் பதிலளித்தார்.
"எப்போது? எங்கே" என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்க "புதன் அல்லது வியாழன்" என ஜி.வி.பிரகாஷ் கூறினார். அதற்கு "25-ம் தேதி வெளியூரில் இருக்கிறேன். 27-ம் தேதி சந்திக்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.