ரசிகர்களின் கலாய்ப்புகள் தொடர்ந்ததால், ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் தளத்தில் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தங்கள் பேரன்பை கொட்டும் அதேவேளையில், பிரபலங்கள் மீதான தொந்தரவு தாக்குதல்களையும் ரசிகர்கள் அவ்வப்போது நிகழ்த்துவது வழக்கம்.
ஒரு நடிகரின் ரசிகர்கள் மற்றொரு நடிகருக்கு எதிராக ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இந்தியளவில் ட்ரெண்ட் செய்து கேலி செய்வார்கள். இது வழக்கமாக அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையே நடக்கும் நெட்டுப் போர்.
ஒரு நடிகர் தாம் விஜய் ரசிகர் என்று தெரிவித்தால், அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக கலாய்ப்புப் பணியில் ஈடுபவர். இதேபோல் தான் அஜித் ரசிகர் என்று ஒரு நடிகர் அறிவித்ததாலேயே அவர் விஜய் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்ட கதைகளும் நடந்துள்ளது. இதுதான் இப்போது ஜி.வி.பிரகாஷ் விஷயத்தில் நடந்திருக்கிறது.
தன்னை விஜய் ரசிகர் என்று அறிவித்துக் கொண்டதால், ட்விட்டரில் ஒரு தரப்பு ரசிகர்கள் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக கிண்டல் செய்ததன் எதிரொலியாக பலருக்கும் ஜி.வி.பிரகாஷ் பதிலளித்தார். அதில் பெரும்பாலான பதில்கள் காட்டமாக இருந்தன.
ஆனால், அந்த பதில்கள் அனைத்தையுமே ஜி.வி.பிரகாஷ் உடனடியாக தனது பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.
"நான் என் வேலையைப் பார்ப்பதற்காக இங்கு வந்திருக்கிறேன். ஆனால், புலம்புவதற்காக நான் வரவில்லை. நான் ஒருத்தரை பின்பற்றுகிறேன், அது என்னுடைய தேர்வு. அதைப் பற்றி நீங்கள் புலம்பவேண்டிய அவசியமில்லை" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.