எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும் என்று பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு பதிலளித்துள்ளார் கமல்.
நடிகர் கமல்ஹாசனின் 63-வது பிறந்தநாள் நேற்று (நவம்பர் 7) கொண்டாடப்பட்டது. தனது பிறந்தநாளின்போது நற்பணி இயக்கத்தினரை சந்திப்பதையும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதையும் தொடர்ந்து செய்து வருபவர் கமல்ஹாசன்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் இந்த ஆண்டில் தனது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால் நேற்று அவரது ரசிகர்கள் பெரிதாக கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை.
கமலின் பிறந்த நாளன்று திரையுலகினர் பலரும் தொலைபேசி வாயிலாக தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். மேலும், சமூக வலைத்தளத்திலும் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு, "அன்பு ரசிகர்கட்கும் மனமுவந்து வாழ்த்திய சக கலைஞர்கட்கும் மேலும் நன்றிக்கடன் பட்டேன். எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.