தமிழ் சினிமா

கபாலி நஷ்டம்: ரஜினியை சந்திக்க தீவிர முயற்சியில் திரையரங்க உரிமையாளர்கள்

ஸ்கிரீனன்

'கபாலி' படத்தை திரையிட்டதால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக, ரஜினியை சந்திக்க திரையரங்க உரிமையாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான இப்படத்தை தாணு தயாரித்திருந்தார்.

இப்படம் தமிழகம் முழுவதும் பெரும் விலைக்கு விற்கப்பட்டதாக, பட வெளியீட்டின் போது சர்ச்சை எழுந்தது. மேலும், முதல் நாள் டிக்கெட்டின் விலை அதிக விலைக்கு விற்கப்பட்டதாகவும் சர்ச்சை உண்டானது.

ஜூலை 22ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பெரும் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பாளர் தாணு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். படத்துக்கான வெற்றி கொண்டாட்டத்தின்போது இதை தெரிவித்தார்.

சமீபமாக, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஊர்களில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறி தாணுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வந்திருக்கும் திரையரங்க உரிமையாளர் ராமதாஸிடம் கேட்ட போது, "திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாவில் மட்டும் சுமார் 2 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டமடைந்த அனைவருக்கும் பணத்தை திருப்பி தருவதாக தாணு கூறி வந்ததால் நாங்கள் பொறுமையாக இருந்தோம். ஆனால், தற்போது அது நடக்காதது போன்று தெரிகிறது.

அப்படம் 600 கோடி எல்லாம் வசூலிக்கவில்லை. மேலும், இது தொடர்பாக தாணுவே "வசூல் விவரம் நான் கூறவில்லை. அதை ஊடகங்களே போட்டுக் கொண்டார்கள். நானே நஷ்டப்பட்டு விட்டேன்" என்று கூறுகிறார். தற்போது திருச்சி - தஞ்சாவூர் திரையரங்க உரிமையாளர்கள் வந்திருக்கிறோம். மற்ற திரையரங்க உரிமையாளர்களும் வந்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ராகவேந்திரா திருமணம் மண்டபத்தில் ரஜினியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அளிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். 'கபாலி' நஷ்டம் என்று வெளியாகி இருக்கும் தகவலால் பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ரஜினியின் முந்தைய படமான 'லிங்கா'வும் இப்பிரச்சினையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT