மறைந்த இயக்குநர் கே.சுபாஷின் கடைசி கதையில் விஷால் மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.
'சத்ரியன்', 'அபிமன்யு', 'ஏழையின் சிரிப்பில்', 'சபாஷ்' உள்ளிட்ட படங்களின் இயக்குநரும், கதாசிரியருமான கே.சுபாஷ் நவம்பர் 23ம் தேதி சென்னையில் காலமானார். தமிழ் திரையுலகினர் பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இயக்குநர் கே.சுபாஷ் தனது இறுதி காலகட்டத்தில் 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற பெயரில் கதை ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அக்கதையை பிரபுதேவா இயக்க விஷால், கார்த்தி இருவரும் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு துவங்கும் எனத் தெரிகிறது.
இது குறித்து விஷால், "இயக்குநர் சுபாஷ் காலமாகிவிட்டார். நான் நடிகராவேன் என்று சொன்ன முதல் ஆள் அவர் தான். அவரை மறக்கவே முடியாது. அவருடைய இறுதி கதையில் கார்த்தியுடன் நடிக்கவிருப்பது பெருமைக்குரியது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.