'காந்தாரா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளதை அடுத்து பாலிவுட்டிலிருந்து தனக்கு வாய்ப்புகள் வந்துள்ளதாக படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பெரிய திரையில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள கன்னட திரைப்படம் 'காந்தாரா' (Kantara). பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக கந்தாரா வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி என்பவர் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.
நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து எழுதியிருக்கும் திரைக்கதை உடன் படத்துக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. கருத்தியல் ரீதியில் எதிர் விமர்சனங்களையும் கொண்ட ‘காந்தாரா’ படம் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ள படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, “எனக்கு பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து வாய்ப்புகள் வந்தன. ஆனால், இப்போது நான் கன்னடத்தில் மட்டுமே திரைப்படங்களை இயக்க விரும்புகிறேன். எனக்கு அமித்தாப் பச்சன் மிகவும் பிடிக்கும். மேலும் இளைய தலைமுறை நடிகர்களான ஷாஹித் கபூர், சல்மான் கானும் எனக்கு விருப்பத்திற்குரிய நடிகர்கள் தான்” என்றவரிடம், 'காந்தாரா 2’ பாகம் குறித்து கேட்டபோது, “அது குறித்து நான் யோசிக்கவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி நடந்தால் அதற்கான அறிவிப்பை வெளியிடுவேன்” என்றார்.