தமிழ் சினிமா

கதைக் களத்துக்காக சம்பளம் குறைப்பு: தியாகராஜன் குமாரராஜா மகிழ்ச்சி

ஸ்கிரீனன்

தனது படத்தின் கதைக் களத்துக்காக நடிகர், நடிகைகள் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா.

'ஆரண்ய காண்டம்' படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் கழித்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் தியாகராஜன் குமாரராஜா. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நாயகர்களாக விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

'ஆரண்ய காண்டம்' படத்தின் பின்னணி இசை பெரியளவில் பேசப்பட்டது. அப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார்.

சென்னையில் தொடங்கப்பட்டு இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டு இருப்பது போலவும், அவருக்கு தியாகராஜன் குமாரராஜா காட்சியை விளக்குவது போலவும் அப்புகைப்படம் அமைந்திருக்கிறது. அப்புகைப்படம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அப்படத்தில் பணியாற்றி வரும் ஒருவரிடம் பேசிய போது, "இப்படத்தை தியாகராஜன் குமாரராஜாவே தயாரித்து வருகிறார். கதைக்களம் மிகவும் வலுவானது என்பதால், இதில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தங்களுடைய சம்பளத்தை பெருமளவு குறைத்துக் கொண்டார்கள். இதில் நடிக்கும் நடிகர் ஒருவர் தன்னுடைய சம்பளத்தை பாதிக்கும் குறைவாகவே பேசியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் தியாகராஜன் குமாரராஜா மகிழ்ச்சியில் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT