தமிழ் சினிமா

‘லவ் டுடே’ நவீன காதலை பேசும் படம் - இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நேர்காணல்

செ. ஏக்நாத்ராஜ்

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் ‘லவ் டுடே’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 4ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி அவரிடம் பேசினோம்.

இயக்குநரா அறிமுகமாகி ஹீரோவாகிட்டீங்களே?

இது எனக்காக எழுதப்பட்ட கதைதான். ‘கோமாளி’ பண்ணும்போதே, அடுத்த படத்துல நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அந்தப் படத்தோட வெற்றி, நான் எதிர்பார்த்ததை விட அதிகமா இருந்தது. பிறகு படம் இயக்க சில வாய்ப்புகள் வந்தன. இருந்தாலும் என் நடிப்பு ஆசையை நிறைவேற்றலாம்னு இந்தக் கதையை உருவாக்கினேன். இது, நான் ஏற்கனவே இயக்கிய ‘அப்பா லாக்’ அப்படிங்கற குறும்படத்தோட விரிவான கதைதான். குறும்படம் பண்ணும்போது நானே, இயக்கி நடிப்பேன். அதனால நடிப்பு ஆசையும் எனக்கு இருந்தது. இயக்கம், நடிப்பு ரெண்டுமே பிடிக்கும். அதையே தொடர்வேன்.

இது இன்றைய ‘மாடர்ன் டே’ காதலை சொல்ற படமா?

இந்தக் கதையை பொறுத்தவரை ஓர் இளம் ஜோடி, தங்கள் செல்போனை மாற்றிக் கிறாங்க. அதனால ஏற்படற பிரச்னைகள்தான் படம். அவங்க சேர்றாங்களா, இல்லையா?ன்னு கதை போகும். ஒரு வீட்டுல ஒருத்தருக்கு வர்ற பாதிப்பு, அந்தக் குடும்பத்தை எப்படி பாதிக்கும். சந்தேகங்கறது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்னு கதைப் பேசும்.

டிரெய்லர் பார்க்கும்போது ‘அடல்ட்’ பட சாயல் மாதிரி தோணுதே?

அப்படியில்லை. இளைஞர்களைக் கவனிக்க வைக்கறதுக்காக உருவாக்கப்பட்ட டிரெய்லர் அது. படம், குடும்பத்தோட, குழந்தைகளோடபார்க்கிற மாதிரிதான் இருக்கும். இல்லைனா,சத்யராஜ் சார், ராதிகா மேடம்லாம் நடிப்பாங்களா? ஏஜிஎஸ் நிறுவனமும் அப்படியொரு படத்தைத் தயாரிக்க மாட்டாங்க. இது ஒரு ஜாலியான படம்.

இந்தப் படத்துல என்ன மெசேஜ் சொல்றீங்க?

நம்ம உண்மையான முகத்துக்கும் போன்ல இருக்கிற முகத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. நிஜ வாழ்க்கையில நேர்ல சந்திச்சா யாரும் யாரையும் திட்டிக்க மாட்டோம். ஆனா, சிலர், ‘ஃபேக் ஐடி’யில போயி திட்டுற நிலைமை இருக்கு. அந்த மனநிலையை சொல்லணும்னு நினைச்சேன். அதோட ஒரு மொபைல் கையவிட்டுப் போனா,அதிகமா டென்ஷன் வந்திருது. ஏன்னா, அதுலஇருக்கிற ‘கன்டென்ட்’ கசிஞ்சிரும்னு எல்லோருமே நினைக்கிறாங்க. இது ஏன்னு எனக்குள்ள கேட்டேன். இந்தப் படம் உருவாச்சு. படத்துல நல்ல மெசேஜும் இருக்கு.

‘லவ் டுடே’ விஜய் பட தலைப்பாச்சே?

ஆமா. நடிகனா இது எனக்கு அறிமுகப்படம். விஜய் பட தலைப்புங்கறதால ரசிகர்களைக் கவனிக்க வைக்கும்னு நினைச்சேன். அதோட இந்தக் கதைக்கும் தலைப்பு பொருத்தமா இருந்தது. அதனால, அனுமதி வாங்கி இந்தத் தலைப்பை வச்சிருக்கோம்.

டிரெய்லர் பார்த்துட்டு சிம்பு பாராட்டினாராமே?

அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. தனுஷ் சாருக்கும் பிடிச்சிருந்தது. பாராட்டினார். சிவகார்த்திகேயனும் நல்லாயிருக்குன்னு சொன்னார். இவங்க வாழ்த்து மகிழ்ச்சியை கொடுத்திருக்கு. படம் ஏற்கனவே நல்ல லாபத்துக்கு விற்கப்பட்டிருக்கு. ரசிகர்கள்கிட்டயும் நல்லா ரீச் ஆனா, மகிழ்ச்சியா இருக்கும்.

SCROLL FOR NEXT