நடிகை காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கோஸ்டி பட டீசர் வெளியாகி உள்ளது.
'குலேபகாவலி, 'ஜாக்பாட்' படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'கோஸ்டி' (ghosty). படத்தில் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஆடுகளம் நரேன், மனோபாலா, ராஜேந்திரன், மயில்சாமி, ராதிகா, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை சீட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி?
படத்தில் காவல்துறையைச் சேர்ந்தவராகவும், நடிகையாகவும் இரட்டை வேடங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். நகைச்சுவை கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விநோதமான டாஸ்க்குடன் வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதை டீசர் உணர்த்துகிறது. டீசரின் இறுதியில் வரும், 'ஓடிடியில ரிலீசான ஓட்டி ஓட்டி பாக்கலாம்னு பாக்குறீயா, தியேட்டர்ல தான் ரிலீசாகும்' என யோகிபாபுவின் வசனம் கவனம் பெறுகிறது. மொத்த டீசரும் முக்கியமான நடிகர்களின் தோற்றத்தால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்னும் இந்த பேய் பட சீசன் முடியவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது.