அஜித் குமார் | துணிவு பட போஸ்டர் 
தமிழ் சினிமா

பொங்கலுக்கு வெளியாகும் அஜித் குமாரின் 'துணிவு': படக்குழு அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படமான ‘துணிவு’ எதிர்வரும் 2023 பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் ‘வலிமை’ வெளியாகி இருந்தது. இந்நிலையில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் துணிவு படத்தில் நடித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது.

இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார். படத்தின் வெளியீடு எப்போது என்பது குறித்த எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்த நிலையில் இப்போது அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்க்கும் போது படத்தின் கதை வங்கியை மையமாக கொண்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு அஜித் படம் வெளியாக உள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT