தமிழ் சினிமா

ஓர் இளம் பெண்ணின் ஏமாற்றத்தைச் சொல்லும் படம்! - இயக்குநர் ஆர்.கண்ணன்

செ. ஏக்நாத்ராஜ்

மலையாளத்தில் உருவான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார், இயக்குநர் ஆர்.கண்ணன். குடும்ப அமைப்பு, பெண்களை எப்படி சுரண்டுகிறது என்பதை, இதை விட சிறப்பாக எந்தப் படமும் சொல்லியிருக்க முடியாது என்று அப்போது வெளியான விமர்சனங்கள் விளாசி இருந்தன. தமிழுக்கு என்ன மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்?

“ஒரு மாற்றமும் இல்லை. அங்க நிமிஷா சஜயன் பண்ணிய கேரக்டரை இங்க ஐஸ்வர்யா ராஜேஷ் பண்ணியிருக்காங்க. சுராஜ் வெஞ்சரமூடு கேரக்டரை ராகுல் ரவீந்திரன் பண்ணியிருக்கார். தமிழ்ல காரைக்குடி பகுதியில கதை நடக்கும். கதை எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். எல்லா பெண்களுக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்தப் படத்து நாயகிக்கும் அப்படித்தான். அந்த எதிர்பார்ப்பு என்னவாகுதுங்கறதுதான் படம்” என்கிறார் ஆர்.கண்ணன்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்புல மிரட்டுவாங்களே?

உண்மைதான். புதுசா கல்யாணம் ஆன ஓர் இளம் பெண்ணின் ஏமாற்றத்தை, கோபத்தை, வெறுப்பை, வலியை ரொம்ப இயல்பா வெளிப்படுத்தி இருக்காங்க. படம் முழுவதும் அவங்களைச் சுற்றிதான் அப்படிங்கறதால, அருமையா நடிச்சிருக்காங்க. கண்டிப்பாக இந்தப் படம் அவங்களுக்குப் பாராட்டைக் கொடுக்கும்.

ராகுல் ரவீந்திரன் எப்படி?

இந்த கேரக்டருக்கு பொருத்தமா இருக்கார். ஒரு பணக்கார வீட்டு பையன். வாத்தியார் வேலை பார்க்கிற கேரக்டர். இயல்பா நடிச்சிருக்கார். அதே போல, அந்த வீட்டுல இருக்கிற பழமைவாதியான மாமனாரா, நந்தகுமார் நடிச்சிருக்கார். அவருக்கு குக்கர்ல சாதம் வச்சா பிடிக்காது, துணியை வாஷிங்மெஷின்ல துவைச்சா பிடிக்காது, அந்த மாதிரியான கேரக்டர். இதுவரை அவரைப் பார்த்ததுக்கும் இதுல பார்க்கறதுக்கும் நிறைய வித்தியாசம் தெரியும். தியேட்டர்ல ரிலீஸ் பண்றதுக்கான வேலைகள் போயிட்டிருக்கு. இன்னும் தேதி முடிவு பண்ணலை.

பழைய ‘காசேதான் கடவுளடா’ படத்தை ரீமேக் பண்ணுனீங்களே?

ஆமா. அது முழுக்க முழுக்க காமெடி படம். ‘மாடர்ன் டே’ காமெடியா இருக்கும். சிவா, கருணாகரன், பிரியா ஆனந்த், ஊர்வசின்னு நிறைய நட்சத்திரப் பட்டாளம். தேங்காய் சீனிவாசன் கேரக்டர்ல யோகிபாபு பண்ணியிருக்கார். படம் முடிஞ்சிடுச்சு. சென்சார்ல, ‘யு’ சர்டிபிகேட் கிடைச்சிருக்கு. நவம்பர்ல ரிலீஸ் பண்ண முடிவு பண்ணியிருக்கோம்.

ஹாரர் படம் இயக்குறதா செய்தி வந்ததே?

முதன் முதலா, ஒரு ஹாரர் படம் பண்றேன். ஹன்சிகா நடிக்கிறாங்க. எமோஷனலான ஹாரர் படமா இருக்கு. முதல் ஷெட்யூல் முடிச்சுட்டு வந்திருக்கோம். ஹன்சிகாவை இதுல வேற மாதிரி பார்க்கலாம். கிராபிக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்குகிறோம். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்துல நான் இயக்குநர் மட்டும்தான். ‘காசேதான் கடவுளடா’ ரீமேக், இந்த ஹாரர் படம் ரெண்டையும் இயக்கித் தயாரிக்கிறேன்.

SCROLL FOR NEXT