பள்ளி ஆசிரியர் அன்பரசனுக்கும் (சிவகார்த்திகேயன்), அதே பள்ளியின் ஆங்கில ஆசிரியை, பிரிட்டீஷ் பெண் ஜெசிகாவுக்கும் (மரியா) காதல். முற்போக்குச் சிந்தனை கொண்ட அன்பரசனின் தந்தை உலகநாதனுக்கு (சத்யராஜ்) பிரிட்டீஷ் என்றால் ஆகவே ஆகாது. அதற்கு அவர் காரணம் வைத்திருக்கிறார். ஜெசிகாவின் தந்தைக்கு இந்தியன் என்றாலே ஆகாது. அதற்கு இவரிடமும் இருக்கிறது காரணம். இவர்கள் மோதலை மீறி அன்பு - ஜெசிகா காதல் எப்படி ஜெயிக்கிறது என்பது படம்.
சிம்பிளான கதையை, காமெடி கலந்து சொல்ல நினைத்திருக்கிறார் தெலுங்கு இயக்குநர் அனுதீப். அதன்படி மனிதநேய மெசேஜ், போர் இழப்பு, தேசப் பக்தி என்றால் என்னஎன்பதைக் குழைத்து ஜாலி ஆட்டம் ஆடியிருக்கிறார்கள். இதில், பாட்டில்கார்ட் (bottlegourd) காமெடி, ஹியூமானிட்டி, சேர, சோழ பாண்டியன் விளக்கம், ஸ்கூல் பசங்களின் நகைச்சுவை உட்பட பல காட்சிகளுக்கு தியேட்டரில் சிரிப்புச் சத்தம், பலமாகவே கேட்கிறது. ஆனால், மொத்தப் படத்துக்குள்ளும் சில இடங்களில் மட்டுமே காமெடி கைகொடுத்திருப்பதும் சீரியஸ் காட்சிகள் கூட, சீரியல் போல தோன்றும் உருவாக்கத் தரம் பலவீனமாக இருப்பதும் இரண்டுமணிநேரம், கதையை நகர்த்த வலுவான அம்சம் ஏதும் இல்லாமல் இருப்பதும் திரைக்கதையைஏகத்துக்கும் பஞ்சராக்கி இருக்கிறது.
‘டான்’ படத்தில் மாணவனாக வந்த சிவகார்த்திகேயன் இதில் ஆசிரியராக புரமோஷனாகி இருக்கிறார். இந்தக் கதைக்கு எந்த மெனக்கெடலும் தேவையில்லை என்பதால், சட்டையை மாற்றிப் போட்டுவிட்டு வந்ததுமாதிரி அப்படியே இருக்கிறார். ஜெசிகாவை கண்டதுமே காதலில் விழுவதில் தொடங்கி, காதலுக்கு எதிரானவர்களைச் சமாளிப்பது வரை அவர் படும்பாடுதான் படம் என்பதால், தன் கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார். நடிப்பிலும் நடனத்திலும் வழக்கம் போல அப்ளாஸ் அள்ளுகிறார்.
பிரிட்டீஷ் பெண் ஜெசிகாவாக உக்ரைன் நடிகை மரியா. வழக்கமான சினிமா காதலிகள் செய்யும் வேலையைதான் இவரும் செய்கிறார். எமோஷனல் காட்சிகளில், நடிப்பில் தடுமாறுகிறார். உலகநாதனாக சத்யராஜ். தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்ளும் கேரக்டர். சாதி, மத வேற்றுமைகளைமறுக்கும் முற்போக்காளரான அவர், பிரிட்டிஷார்மீது வெறுப்பைக் கொண்டிருப்பது அவருடையகதாபாத்திர வடிவமைப்பிலோ முற்போக்கு சிந்தனைகளிலோ இயக்குநருக்கு தெளிவில்லை என்பதையே காட்டுகிறது.
உள்ளூர் வில்லனாக பிரேம்ஜி அமரனை, நெகட்டிவ் கேரக்டரில் பார்க்க வித்தியாசமாகத்தான் இருக்கிறது. சிவாவின் நண்பர்களாக வரும் பாரத், பிராங்ஸ்டார் ராகுல், சதீஷ் ஆகியோர் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர். சிறிது நேரமே வந்தாலும் ஆனந்தராஜ் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.
தமனின் இசையில் ‘ஜெசிகா’, ‘பிம்பிளிக்கு பிளாப்பி’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை கதையின் ஓட்டத்துக்கு உதவி இருக்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, இல்லாத கதையோடு நம்மை இழுத்துச் செல்கிறது.
சமூக அறிவியல் ஆசிரியர் சிவகார்த்திகேயன், பள்ளி நேரத்தில் சினிமாவுக்குச் செல்வது, எளிய வரலாற்றுத் தகவல்கள் கூடதெரியாமல் இருப்பது என பல வகைகளில்மாணவர்களுக்கு மோசமான முன்னுதாரணமாக இருப்பதுதான் காமெடியா இயக்குநரே? என்று கேட்க தோன்றுகிறது.