பெண்களின் அகத்தையும், அகம் சார்ந்த அவர்களது விருப்பங்களையும் வெளிப்படுத்தும் பாடல்கள் சங்க இலக்கியத்தில் ஏராளமாக காணப்படுவதாக கூறப்படும். நிகழ்காலத்தில் அந்த அகத்தின் வெளிப்பாடுகளை வெளிக்கொணர்ந்ததில் மேஸ்ட்ரோவின் பாடல்களுக்கு பெரும்பங்குண்டு. அவரது இசையில் பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் , சித்ரா, சைலஜா, உமா ரமணன், ஸ்வர்ணலதா என நீளும் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் நாயகிகளுக்காக பாடியுள்ள தனிப்பாடல்களின் திரட்டே அதற்கு சாட்சி. அதுவும் ஸ்வர்ணலதாவின் குரலில் வரும் பாடல்களுக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பிருக்கும்.
அந்த வகையில், இதுவரை எத்தனையோ முறை கேட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் நம்மைக் கேட்கும் தூண்டும் ஒரு பாடல்தான், 1990-ம் ஆண்டு இயக்குநர் கே.சுபாஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘சத்ரியன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'மாலையில் யாரோ மனதோடு பேச' பாடல். ஆர்ப்பாட்டமில்லாத கடல், விரிந்து பரந்த மரங்கள், வண்ண மீன்களே மயங்கி பார்க்கும் நாயகியென கண்களை நிறையச் செய்யும் அத்தனையும் கடந்து, ஸ்வர்ணலதாவின் குரலும், இளையராஜாவின் இசையும் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் நம்மை குளிர்விக்கும்.
தொடுவானத்தை தாண்டியும் பரவிக்கிடக்கிறது கடல். நீலக்கடலின் ஆழத்தில் பவளப்பாறைகள், சிப்பிகளென ஏராளமானவை நிரம்பிக் கிடக்கின்றன. தரைதட்டிய இடங்களில் பூத்துக் கிடக்கும் பாறைகளின் மேல் படர்ந்த பாசிகள் பச்சையாக சிரிக்கின்றன. வீட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கும் வண்ண தொட்டிக்குள் சுற்றித் திரிந்த மீன் தனித்துக் கிடக்கும் கடலில் நீந்தி பறக்கிறது. அதுவரை நீந்த மட்டுமே தெரியும் என்ற கற்பிதங்களை மீறி வேகவேகமாக பறக்கிறது மீனும், நாயகியின் மனதும்.
இப்பாடலை ஐயா வாலி எழுதியிருப்பார். வரிகளில் ஒவ்வொன்றும் சிப்பியை உடைத்து கிடைக்கும் முத்துக்களாய் கொட்டியிருப்பார். பாடலுக்குள் செல்லுமுன், பாடலின் தொடக்க இசை வரும் 25 விநாடிகள் கீபோர்ட், கிடார் மற்றும் வயலின்களைக் கொண்டு இறக்கும் வலையில் லாவகமாக வந்து சிக்கிக்கொள்ளும் நம் மனங்களை, பின்வரும் புல்லாங்குழல் இசையால் ஆழ்கடல் வரை சுண்டியிழுத்துச் செல்கிறார் இசைஞானி.
"மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே…
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்…
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது" என்று பாடலின் பல்லவியை எழுதியிருப்பார் ஐயா வாலி.
முதல் மற்றும் இரண்டாவது சரணங்கள்,
"வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற
வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது
கறை மேல் நானும் காற்று வாங்கி
விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல
கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது" என்று தனது வரிகளால், நம்மை வாரி வளைத்திருப்பார்.
முதல் மற்றும் இரண்டாவது சரணங்களில் வரும் முதல் இரண்டு வரிகளை ஸ்வர்ணலதா பாடி முடிக்கும் வேளைகளில், இசைஞானியின் புல்லாங்குழல் இசைக் கலைஞர் அருண்மொழி இசைக்கும் அந்த இசையை விவரிப்பது கடினம். அத்தனைப் பெரிய கடலையும், தனது புல்லாங்குழலின், துளைகளுக்குள் வாரி இறைத்திருப்பார். ராஜாவின் ஈர்ப்பிசை கடல் அலை நாளையும் நீளும்...
மாலையில் யாரோ பாடல் இணைப்பு இங்கே
முந்தைய அத்தியாயம்: இளையராஜாவுடன் இசையிரவு 11 | ‘அம்மானா சும்மா இல்லடா’ - என்றும் மறவாத முந்தானைச் சேலையின் வாசம்