கார்த்தி நடித்திருக்கும் ‘சர்தார்’, வரும் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கிபாண்டே உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள். படம் பற்றி பேசினோம் கார்த்தியிடம்.
நிறைய கெட்டப்ல வர்றீங்களே?
ஆமா. தமிழ்ல உளவாளிகள் பற்றிய கதைகள், ஜேம்ஸ்பாண்ட் மாதிரியான படங்கள் அதிகமா வந்ததில்லை. நம்ம ஊர்ல ஒருத்தன் உளவாளியா இருந்தா எப்படி இருப்பான், அவன் செயல்பாடு எப்படி இருக்கும்? அப்படிங்கறதுதான் இந்தப் படம். இயக்குநர் மித்ரன் கதை சொன்னப்ப, எனக்குப் பிடிச்ச விஷயமா இருந்ததும் அதுதான். அந்த உளவாளியா இருக்கிறவன் என்ன பண்றான், எந்த கேஸுக்காக அவன் உழைக்கிறான் அப்படிங்கறது, மிரட்டற மாதிரி இருந்தது. இந்த இரண்டு விஷயம், இந்தப் படத்துல நடிக்க என்னை ஈர்த்தது. நான் அதிக கெட்டப் போட்டு நடிச்சது இல்லை. இந்தக் கதை அதைக் கேட்டது. அதுக்கான தேவையும் அவசியமும் இருந்தது. அதனால பண்ணினேன்.
இதுல எந்த கெட்டப்புக்கு அதிக சிரத்தை எடுத்தீங்க?
அப்பா கெட்டப். அதாவது 60 வயதான ஆள். அவர் பழைய அதிகாரி அப்படிங்கறதால உடல் வலிமை இருக்கணும். அந்த வயசும் தெரியணும். ஆக்ஷன் காட்சிகள்லயும் நடிக்கணும். அதனால அது கடினமா இருந்தது. பட்டம் ரஷித் சார்தான் அந்த மேக்கப் பண்ணினார். மிகப்பெரிய மெனக்கெடல் அதுக்காக இருந்தது.
வெளிநாடுகள்ல இதன் ஷூட்டிங் நடந்திருக்கே?
வெவ்வேறு நாடுகள்ல, செட்கள்ல இதைப் படமாக்கி இருக்கோம். 1980-கள்லயும் கதை நடக்கறதால, அந்தக் காலகட்டத்தை மறு உருவாக்கம் பண்றது, அதற்கான ஆய்வு பெரிய உழைப்பா இருந்தது. ஏன்னா, ஸ்பை கதைங்கறதால, ஏதாவது ஒரு மேற்கத்திய படத்தோட ஒப்பிட ஆரம்பிச்சிருவாங்க. அப்படி வந்திடக் கூடாதுன்னு கேமரா, கலை இயக்கம்னு ஒவ்வொரு விஷயத்தையும் கவனிச்சுப் பண்ணியிருக்கோம்.
என்ன மாதிரியான உளவாளி?
நம்ம சுற்றி இருக்கிற விஷயம், நமக்கு ஒரு அளவுக்குத்தான் தெரியும். அதை உள்ள போய் ஆழமா பார்த்தாதான், அதுக்குப் பின்னால இருக்கிற பெரிய விஷயம் புரியும். அதை நாம பார்க்கிறதில்லை. ஆனா, அதைத் தேடிப் போறவங்களோட வாழ்க்கை எப்படி இருக்கு அப்படிங்கறதுதான் படம். அதாவது எந்த அடையாளமும் இல்லாம, மக்களுக்காக உழைச்சுட்டு இருக்கிற உளவாளிகள் பற்றி உணர்வுபூர்வமா சொல்ற படமா இது இருக்கும்.
ஏற்கனவே போலீஸ் கேரக்டர் பண்ணியிருக்கீங்க...இதுல என்ன வித்தியாசம்?
இதே கேள்வியைதான் இயக்குநர் கிட்ட கேட்டேன். இதுல, ஆயுத படை போலீஸ் கேரக்டர்ல வர்றேன். முந்தைய போலீஸ் கேரக்டர்ல இருந்து வேற முயற்சி பண்ணியிருக்கேன். வித்தியாசத்தைப் படம் பார்த்துட்டு நீங்கதான் சொல்லணும்.
த்ரில்லர் படங்களுக்கு இசைதான் பெரிய பலம்...
உண்மைதான். ஜி.வி.பிரகாஷ் அருமையா பண்ணியிருக்கார். முதல்ல ஒரு தீம் மியூசிக் போட்டுக் கொடுத்தார். சர்வதேச தரத்துல இருந்தது. பாடல்கள், எங்க தேவையோ அங்க மட்டும்தான் போட்டிருக்கார். பின்னணி இசையில நிறைய வேலை இருக்கு. கதைக்கேட்கும் போதே அந்தப் பொறுப்பை நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டார். அவர் கண்டிப்பா மிரட்டுவார்.