'கபாலி' நஷ்டம் தொடர்பாக, ரஜினியை சந்தித்து மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள் திருச்சி மற்றும் தஞ்சாவூர் திரையரங்க உரிமையாளர்கள்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான இப்படத்தை தாணு தயாரித்திருந்தார்.
இப்படம் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறி தாணுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து ரஜினியை சந்திக்க முயற்சித்து வந்தார்கள்.
இந்த சர்ச்சை தொடர்பாக தாணு, "அந்த ஏரியா விநியோக உரிமையை விநியோகஸ்தர் பிரான்சிஸிடம் கொடுத்தேன். தற்போது வந்திருப்பவர்கள் அவர்களிடம் என்னிடம் படம் வாங்கவில்லை. நானும் அவர்களிடமிருந்து பணம் வாங்கவில்லை. 125 நாள் கழித்து வந்து நஷ்டம் என்கிறார்கள். அவர்கள் யார் என்றே தெரியாது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்றிரவு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் '2.0' படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அங்கு திருச்சி - தஞ்சாவூர் திரையரங்க உரிமையாளர்கள் சென்றிருக்கிறார்கள். அப்படப்பிடிப்பிலிருந்து ரஜினி கிளம்பிய போது, இவர்கள் அளித்த மனுவை மட்டும் வாங்கியிருக்கிறார். அந்த மனுவில் தாங்கள் என்ன விலை கொடுத்தோம், எவ்வளவு வசூல் ஆகியிருக்கிறது, எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என்ற மொத்த தகவலும் அடங்கியிருப்பதாக கூறுகிறார்கள்