''மகிழ்ச்சியான தருணங்கள்; காலம் போனதே தெரியவில்லை'' என இயக்குநர் மோகன்.ஜிக்கு நடிகர் செல்வராகவன் நன்றி தெரிவித்துள்ளார்.
'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை எஸ்.எஸ்.ஐ புரொடஷன் சுப்பையா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ''டப்பிங் பணிகள் முடிந்தது.. இந்த மாமனிதருடன் பணிபுரிந்த நாட்கள் மறக்க முடியாத நாட்கள்.. மீண்டும் செல்வா சாருடன் இணைந்து பணிபுரிய ஆசை.. இனிமையான, எளிமையான மாமனிதர் இவர்.. நன்றி'' என பதிவிட்டுள்ளார்.
இதை ரி-ட்வீட் செய்துள்ள செல்வராகவன், ''மகிழ்ச்சியான தருணங்கள் ! காலம் போனதே தெரியவில்லை ! பேரன்புக்கு நன்றி '' என தெரிவித்துள்ளார்.