நடிகர் ரஜினிகாந்த்துடனான சந்திப்பு குறித்து நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தைப்பார்த்த பின் நடிகர் சரத்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினி அவரை வாழ்த்தியுள்ளார். இந்நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சரத்குமார், ரஜனியை நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பாக சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பு நண்பர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் "பெரிய பழுவேட்டரையர்" கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை அலைபேசியில் அழைத்து ஆத்மார்த்தமாக பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அவரை நேரில் சந்தித்ததில் இனிய தினமாக நாள் துவங்கியது. எனது பணிகள், மகள் வரலட்சுமியின் பணிகள், திரைத்துறை வளர்ச்சி மற்றும் பொதுவான கருத்துகளை பகிர்ந்து காபியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உரையாடலில் இருவருக்கும் இடையேயான நட்பினை எண்ணி நெகிழ்ந்தேன்” என பதிவிட்டுள்ளார்.