இயக்குநர் ராம் இயக்கத்தில் ஜீவா - அஞ்சலி நடிப்பில் உருவான 'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் கடந்து விட்டன. படம் குறித்தும், அதில் சொல்லப்பட்டிருக்கும் காதல் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.
விடுபடுதல் என்பது வாழ்வின் அத்தனை பிடிமானங்களிலிருந்து ஆகிறுதியை தளர்த்தி வெளியேறுவது. காலச்சக்கர ஓட்டத்தின் அச்சாணியிலிருந்து முற்றிலும் அறுபட்டுப்போவது! இறுக்கமாக தன்னை பீடித்திருக்கும் இந்த வாழ்விலிருந்து முற்றிலுமாக அறுபட்டு வெளியேற விரும்புகிறான் பிரபாகர் (ஜீவா). அதற்கு நியாயம் சேர்க்கும் ஆயிரம் காரணங்களையும், நூறு சம்பவங்களையும் அவன் செல்லுமிடமெல்லாம் சேர்த்தே சுமக்கிறான். பிரபாகரின் உலகத்துக்குள் பிரவேசிப்பதென்பதும், அது குறித்த வியாக்கியானங்களை பேசி விடுபடுதலிலிருந்து அவனை மீட்பதென்பதும் அத்தனை எளிதல்ல. காரணம் அவனது வாழ்க்கை பக்கங்கள் இருண்டது மட்டுமல்ல; ரத்தக்கறை படிந்ததும் கூட. எல்லாவற்றிற்கும் வன்முறையை நியாமாக்கி தீர்ப்பெழுதிவிட முடியாது எனும் பேசும்போது, இயக்குநர் ராம் அதற்கான காரணங்களை பிரபாகர் வாழ்க்கையின் வழி நமக்கு பாடமெடுக்கிறார்.
உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயக்காலின் அசுரத்தனத்தால் ஜீவாவின் தாடியைப்போல பெருகியிருக்கும் ஐடி நிறுவனங்களையும், தமிழ் கற்றுக்கொண்டு வேலை கிடைக்காமலும், கிடைத்த வேலையை தக்கவைக்க முடியாமலும் போராடும் இளைஞனை ஒப்புமைப்படுத்துகிறார் ராம். அந்த இளைஞன் அதிகாரத்தின் லட்டிகளைக் கண்டு, புனையப்படும் பொய் வழக்குகளைக் கண்டும் ஓடிக்கொண்டிருக்கும்போது அவனை ஆற்றுப்படுத்து மூச்சுவிட சொல்கிறது காதல். துரத்திக்கொண்டேயிருக்கும் பெருந்துயருற்ற பிரபாகர் உலகின் அற்புதம் ஆனந்தி! (அஞ்சலி)
படத்தின் எல்லாவற்றையும் தாண்டி அழகு சேர்ப்பது பிரபாகர் - ஆனந்தி காதல் தான். அந்த காதலுக்காக நிச்சயம் படத்தை கொண்டாடலாம். காதலுக்கிடையே இழையும் யுவனின் இசையும், நா.முத்துக்குமாரின் வரிகளும் அப்படியிருக்கும். ஓரிடத்தில் தந்தை இறப்பின் துக்கத்தால் ஆனந்தி அழுது கொண்டிருப்பாள். தேற்றுவதற்கு வார்த்தையில்லாமல் அவள் அருகில் அமர்ந்திருக்கும் பிரபாகர், ''என்ன இருந்தாலும் கோழி றெக்க பிடிச்சு கொடுத்த அதே குட்டி ஆனந்திதானே எனக்கு'' என கூறும்போது, தன் அத்தனை கவலைகளையும், அழுகையையும் முழுங்கிவிட்டு 'நெஜமாத்தான் சொல்றியா' என ஆனந்தி சொல்லி முடித்ததும், ''உனக்காகத்தானே இந்த உயிருள்ளது.. உன் துயரம் சாய என் தோளுள்ளது'' என்ற நா.முத்துகுமாரின் வரிகளை தனது ஈரம் கலந்த குரலில் வருடிக்கொடுப்பார் யுவன்.
உண்மையில் சின்ன சின்ன விஷயங்கள் தான் காதலின் சாரத்தை அழகூட்டி ரசிக்க வைக்கின்றன. அப்படியான விஷயங்களை படத்தின் காட்சிகளில் சரியாக பொருத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தும் கலை ராமுக்கு கைகூடியிருக்கும். ஊர்,பெயர் தெரியாத தனது ஆனந்திக்கு கடிதம் எழுதுவார் பிரபாகர். கேட்டால், ''லெட்டர் எழுதுனா போஸ்ட் பண்ணனும்னு அவசியமா என்ன? லெட்டர் எழுதுறதுக்கு ஒரு பேர் வேணும். இந்த உலகத்துல உன் பேர விட பொருத்தமான பேர் கிடைக்கவா போகுது ஆனந்தி. 'யூவர் டிவைன் பீஸ் ஆஃப் காட்' (your divinve piece of god)'' என கூறுவார். படம் முழுக்க விரவியிருக்கும் 'நெஜமாத்தான் சொல்றியா’ வசனம் இருவரின் காதலுக்கும் உயிர்கொடுத்திருக்கும்.
மொத்தப் படத்திலும் ஆனந்தியும், பிரபாகரும் நேரில் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் குறைவு தான். ஆனால், நினைவுகளால் இணையும் ஃப்ரேம்கள் அதிகம். அந்த நினைவுகளை துண்டுத் துண்டாக்கி தேவையான திரைக்கதையில் கோர்த்திருக்கும் விதம் படத்தை தரமாக்கியிருக்கும். உதாரணமாக தான் ஹாஸ்டலுக்கு செல்லும் காட்சிகளில் தன் பை முழுவதும் கோகுல் சாண்டல் பவுடரை நிரப்புவார் பிரபாகர். கூடவே அவரது காதலின் வாசமும் அதில் கலந்திருக்கும். கோகுல்சாண்டாலை ஆனந்தியின் நினைவை மீட்கும் பொருளாக்கியிருப்பது ரசனை கூட்டியிருக்கும். 'நெஜமாத்தான் சொல்றியா', 'கோகுல் சாண்டால்', 'சுடுதண்ணீர்' என பிரபாரகரின் உலகத்தில் படர்ந்திருக்கும் ஆனந்தியின் நினைவுகளை காட்சியாக்கியிருக்கும் விதம் அலாதியானது.
தொலைத்த ஒரு பொருளை தேடுவதும், தேடிய பொருள் மீண்டும் கிடைபதும் வாழ்வின் கண்ணாமூச்சி விளையாட்டு. அப்படியான விளையாட்டில் ஆனந்தியை, தேடி அலையும்போது, இளையராஜாவின் இசையில் ஒலிக்கும் 'பறவையே எங்கு இருக்கிறாய்' பாடல் படத்தின் ஆன்மாவாக ஜொலிக்கும். 'இந்த புல் பூண்டும், பறவையும், நாமும் போதாதாத... இந்த பூலோகம் முழுதும் அழகாய் மாறாதா' என இளையராஜா கேட்கும்போது, காட்சியின் வெப்பத்தைக்கடந்த உலர் ஈரம் நமக்குள் கடத்தப்பட்டிருக்கும். அதேபோல ஆனந்திக்கு சுடிதார் எடுக்கும் காட்சி இன்றும் நினைவில் தேங்கியிருக்கும்.
இன்று 15 வருடங்களை கடந்து நிற்கிறது ராமின் 'கற்றது தமிழ்'. படத்தின் மீது முரண்பட்ட விமர்சனங்கள் எழுந்திருந்தாலும், படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் காதலும்..யுவனின் இசையும், இளையராஜாவின் குரலும் எத்தனை ஆண்டுகளானாலும் படத்தை தாங்கி நிற்கும்!
முந்தைய அத்தியாயம்: தெறிப்புத் திரை 5 | Zindagi inShort - அந்த 7 பெண்களும் வாழ்வின் அதிர்வுகளும்