நடிகர் விஜய்சேதுபதி 
தமிழ் சினிமா

இன்றைய வியாபார உலகம் உங்கள் நேரத்தை திருட காத்திருக்கிறது - விஜய் சேதுபதி

செய்திப்பிரிவு

''இன்றைய வியாபார உலகத்தில் உங்கள் நேரத்தை திருட காத்திருக்கிறார்கள். இந்த உலகத்தில் யாரும் யாரிடமும் தோற்பதில்லை. யாரும் யாரிடமும் ஜெயிப்பதில்லை'' என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தனியார் கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ''இலக்கியத்தின் மீது எனக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் எப்படி சிந்தித்துள்ளனர் என்பதை எண்ணும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அதைப்பற்றி அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் எப்போதும் அதிகம். நாம் கல்லூரியில் படிப்பது வாழ்க்கையில் பயன்படாது. இங்கே படிப்பது 10 சதவீதம் தான். மனிதனுடன் பழகுவதுதான் வாழ்க்கை.

மனிதர்களிடம் பழகி தெரிந்துகொள்ளுங்கள். யார் மீது கோபம் இருந்தாலும் வெளிக்காட்டாதீர்கள். காலம் நிறைய இருக்கிறது. இன்றைக்கு கோபம் கொண்ட ஒருவனை நான் பின் நாட்களில் சந்திக்கிறேன். அவன் என் நண்பனாக மாறுகிறான். எல்லாவற்றிற்கும் நேரம் கொடுத்து காத்திருங்கள். உடனே வெளிப்படுத்திவிடாதீர்கள். நாம் உடல் ரீதியாக வளர்ந்ததால் பெரிய ஆள் என்று நினைக்காதீர்கள். உடல் ரீதியான வளர்ச்சி வேறு, மன அளவில் வளர்வது வேறு. நாம் தாய், தந்தையின் உயர்த்திற்கு வளர்ந்துவிட்டோம் எல்லாமே தெரியும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அப்படி நாம் இத்தனை நாளாக பொய்யாக நினைத்துக்கொண்டிருந்தோம் என்பதை உணரவே 40 வயதாகிவிடும்.

இன்றைக்கு இருக்கும் வியாபார உலகம் உங்கள் நேரத்தை திருட தயாராக இருக்கிறது. உங்கள் மூளையை எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறது. மூளையை எப்படி ஆஃப் செய்வது ஃபேஸ்புக், கூகுள் மூலம் மார்கெட்டிங் செய்ய துடிக்கிறது. உங்களை எப்படி ஆட்கொள்ளலாம் என்பதில் உலகம் ஆர்வமாக இருக்கிறது. இந்த உலகத்தில் யாரும் யாரிடமும் தோற்பதில்லை. யாரும் யாரிடமும் ஜெயிப்பதில்லை. எல்லாரையும் சந்தேகப்படுங்கள். கேள்வி எழுப்புங்கள். அதற்கான பதில் கிடைக்கும். எனக்கும் மதுபழக்கம் உண்டு. ஆனால் அதை ஊக்குவிக்க கூடாது'' என்றார்.

SCROLL FOR NEXT