பிரதமர் மோடியின் அறிவிப்பால் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் நவம்பர் 10ம் தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது 'கடவுள் இருக்கான் குமாரு'
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் 7 ஜி சிவா என்ற விநியோகஸ்தர் தனக்குத் தர வேண்டிய பாக்கிக்காக, படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், சேலம் சிவா ரூ 35 லட்சத்தை வைப்புத் தொகையாகச் செலுத்திவிட்டு வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கு படத்தின் தயாரிப்பாளர் டி சிவாவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. படத்தை வெளியிட எந்தவொரு தடையுமில்லை என்றும் உத்தரவிட்டார். இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியடைந்தது.
வங்கி ரூபத்தில் வெளியீட்டுக்கு சிக்கல்!
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ள பிரதமர் மோடி, இன்று வங்கிகள் செயல்படாது என்று அறிவித்துள்ளார். தற்போது நீதிமன்றம் செலுத்த கூறியுள்ள 35 லட்சம் வைப்புத் தொகையை கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், நவம்பர் 17-ல் படத்தை வெளியிட தீர்மானித்துள்ளது.