''நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராம்'' என்று நடிகர் ஜெயம் ரவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் ப்ரோமோஷனுக்காக கொச்சி சென்றிருந்த ஜெயம் ரவி, அங்கிருந்து சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் நடிகர் ஜெயராமும் சென்றிருந்தார். இருவரும் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர், "பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப் போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராமுடன் பம்பையில்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஒருமுறை ஜெயம் ரவி, "ஜெயராமுக்கும் எனக்கும் பல வருடங்களாக நெருங்கிய நட்பு உள்ளது. அது நட்பு என்பதை கடந்து அவர் தான் எனக்கு குருசாமியாக இருந்துள்ளார். ரியல் லைஃபில் ஜெயராம் சார் எனக்கு நிறையவே வழிகாட்டியுள்ளார். அவருடன் பொன்னியின் செல்வனில் ஒன்றாக நடித்தது எனக்கு மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டிருந்தார்.