ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் படத்துக்கு 'சர்வம் தாளமயம்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' நவம்பர் 18ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து 'ப்ரூஸ்லீ' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 'அடங்காதே', '4ஜி' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
இப்படங்களைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். முழுக்க இசைப் பின்னணியில் உருவாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்துக்கான பாடல்களை அவர் உருவாக்கி கொடுத்துவிட்டார்.
இப்படத்துக்கான பல்வேறு தலைப்புகள் இணையத்தில் வெளியாகி கொண்டிருந்தன. தற்போது இப்படத்துக்கு 'சர்வம் தாளமயம்' என தலைப்பிட்டு இருக்கிறது படக்குழு. முழுக்க இசைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இருக்கின்றன. நாயகியாக சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதற்காக படப்பிடிப்புகளுக்கு இடையே பிரத்யேக பயிற்சியும் எடுத்து வருகிறார்.