தமிழ் சினிமா

ஃபேஸ்புக் லைவ் மூலம் படம் ஒளிபரப்பு: திரையுலகம் அதிர்ச்சி

ஸ்கிரீனன்

தமிழ் திரையுலகிற்கு திருட்டு டிவிடியைத் தொடர்ந்து 'ஃபேஸ்புக் லைவ்' புதிய அச்சுறுத்தலாக தொடங்கி இருக்கிறது.

ஒரு படம் வெளியான அன்றே, டாரண்ட் வழியே அப்படம் வெளியாகி விடுகிறது. படம் வெளியான அடுத்த நாள் திருட்டு டிவிடி வெளியாகிவிடுகிறது. இதனைத் தடுக்க பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால், எந்தவொரு முயற்சியிலும் திருட்டு டிவிடியை தடுக்கவே முடியவில்லை.

இதனை ஒழிக்க நடிகர் சங்கம் மூலமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால். மேலும், படங்களை ஒளிபரப்பும் பேருந்துகள், கேபிள் டிவி நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றை முடக்குவது உள்ளிட்ட பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார் விஷால்.

தற்போது, தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார்கள். ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் லைவ்வாக வீடியோவை திரையிட வழி இருக்கிறது. அந்த வழி மூலமாக படங்களை ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதில் முதற்கட்டமாக தனுஷ் நடிப்பில் வெளியான 'கொடி' படம் ஒளிபரப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தனி ஒருவன்' திரைப்படம் ஆங்கில சப்- டைட்டிலோடு ஒளிபரப்பட்டது. இதனால் திரையுலகினர் பலரும் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

திருட்டு டிவிடியை ஒழிப்பதற்கு கடுமையாக போராடி வரும் திரையுலகினர் மத்தியில், 'ஃபேஸ்புக் லைவ்' என்ற வழி மூலமாக படங்கள் திரையிடப்படுவது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT