தமிழ் சினிமா

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சஞ்சய் சத்? - ‘விஜய் 67’ அப்டேட்

செய்திப்பிரிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விஜய் 67’ படத்தில் சால்ட் அன் பெப்பர் லுக்கில் வலிமையான வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'விக்ரம்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் கைகோக்கிறார். நடிகர் விஜயும் தற்போது நடித்து வரும் 'வாரிசு' படத்திற்கு பிறகு லோகேஷுடன் இணைகிறார். கேங்க்ஸ்டர் கதையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாளராக சேவியர் பிரிட்டோவும் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட 'மாஸ்டர்' கூட்டணி மீண்டும் கைகோத்துள்ளது.

‘பான் இந்தியா’ படமாக உருவாகும் இப்படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் நடிக்க அவருக்கு ரூ.10 கோடி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் அவர் திரையில் தோன்றுவார் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே 'கேஜிஎஃப் 2' படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் திரையுலகை ஈர்க்கும் வகையிலும், விஜய்யின் செல்வாக்கை அப்பகுதியில் கூட்டும் வகையிலும் சஞ்சய் தத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திரை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல தெலுங்கிலிருந்து நடிகர் ஒருவர் கோலிவுட்டுக்கு அழைத்து வரப்படலாம் எனவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT