தமிழ் சினிமா

திரையிலயும் தரையிலயும் என் போராட்டம் இருக்கும் - இயக்குநர் வ.கவுதமன் நேர்காணல்

செ. ஏக்நாத்ராஜ்

‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ க்குப் பிறகு ‘மாவீரா’ மூலம் மீண்டும் படம் இயக்க வந்திருக்கிறார் வ.கவுதமன். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

‘‘என் லட்சியம் தமிழர்களின் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத மூன்று விஷயங்களைப் படமாக்கணும்கறதுதான். ஏற்கனவே ‘சந்தனக்காடு’ தொடரா பண்ணிட்டேன். அடுத்து ‘முந்திரிகாடு’, ‘வன்னிக்காடு’ இருக்கு. நம் மண்ணையும் மானத்தையும் காத்தவீரனின் கதைதான் ‘மாவீரா’. அடுத்த தலைமுறைக்கு, நம் மண்ணின் மாண்புகளைச் சொல்ல வேண்டியிருக்கு. அப்படிப்பட்ட படைப்புதான் இது’’ என்கிறார் வ.கவுதமன்.

ஜி.வி.பிரகாஷ் எப்படி இந்தக் கதைக்குள் வந்தார்?

இந்தப் படத்தோட முழுக் கதையையும் கேட்டதும் ஜி.வி.பிரகாஷ் கண்டிப்பா இசை அமைக்கிறேன்னு சொன்னார். பிறகு இதே போல, என் வயசுக்கு ஏற்ற மாதிரி ஒரு உண்மைக் கதையை பண்ணுங்கன்னு சொன்னார். சரின்னு சொல்லியிருக்கேன். படத்துக்கு வலிமை சேர்க்கிற விதத்துல வைரமுத்து சிறப்பான பாடலை எழுதியிருக்கார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். வசனங்களை பாலமுரளி வர்மன் எழுதறார்.

மக்கள் போராட்டத்துக்காகக் களத்துல இறங்குனீங்களே... இப்ப மீண்டும் சினிமாவுக்கு வந்துட்டீங்க?

நான் சினிமாவுல இருந்துட்டுதான் போராட்டக் களத்துக்கு போனேன். இப்ப போராட்டக் களத்துல இருந்து சினிமாவுக்கு வந்திருக்கேன். அவ்வளவுதான். தரையிலயும் திரையிலயும் போராடறதுதான் என் வேலை. இரண்டும் எனக்கு வேறு வேறு இல்லை.

இனி தொடர்ந்து படம் இயக்குவீங்களா?

கண்டிப்பா. நம் அடையாளத்தை, நம் வேர்களை எடுத்துச் சொல்லும் படங்களைத் தொடர்ந்து பண்ணுவேன். நம் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்லும் படங்களை எந்த சமரசமும் இல்லாம தர இருக்கிறேன். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களையும் திரைப்படத்தோடு தொடர்புபடுத்தற மாதிரி என் படங்கள் இருக்கும்.

உங்க மகன் தமிழ் அழகன் நடிக்கிறாரா?

‘மாமனிதன்’ படத்தில் விஜய் சேதுபதி மகனா அவர் நடிச்சிருந்தார். இதுலயும் முக்கிய கேரக்டர்ல நடிக்கிறார். அதுபற்றி பிறகு அறிவிக்கிறேன். பல முன்னணி கலைஞர்கள் இதுல நடிக்கிறாங்க. வி.கே புரொடக்க்ஷன் குழுமம் தயாரிக்குது.

SCROLL FOR NEXT