''மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாகத் தழுவிக் கொள்கிறேன்'' என விக்ரம் படத்தின் 100வது நாளையொட்டி நடிகர் கமல் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், பஹத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே நடித்த திரைப்படம் 'விக்ரம்'. உலக அளவில் பெரும் வசூலை வாரிக்குவித்த இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஓடிடியில் படம் வெளியாகி சாதனை படைத்திருந்தாலும், இன்னுமே கூட சில திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 'விக்ரம்' படம் 100-வது நாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 22 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த ஆடியோவில் அவர் உணர்ச்சிபொங்க பேசியுள்ளார். அதில் பேசும் அவர், ‘ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் நூறாவது நாளை எட்டியிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.
தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாகத் தழுவிக் கொள்கிறேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி. தம்பி லோகேஷிற்கு என் அன்பும், வாழ்த்தும்!” எனக் கூறியுள்ளார்.