தமிழ் சினிமா

கேப்டன்: திரை விமர்சனம்

செய்திப்பிரிவு

வட கிழக்கு மாநில எல்லையின், செக்டார் 42 காட்டுக்குள் செல்லும் ஒரு ராணுவ குழு, கொல்லப்படுகிறது. பிறகு கேப்டன் வெற்றிச் செல்வன் (ஆர்யா) தலைமையிலான குழு அங்கு செல்ல, அப்போதும் அசம்பாவிதம் நடக்கிறது. அதில் அவர் குழுவின் (கார்த்திக்) ஹரீஷ் உத்தமன், சக வீரர்களைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிறார். ஒரு வருடத்துக்குப் பின் அதே இடத்துக்கு விஞ்ஞானி கீர்த்தியால் (சிம்ரன்) மீண்டும் செல்கிறது ஆர்யா டீம். அந்தக் காட்டில் என்ன நடக்கிறது, ஹரீஷ் உத்தமன் ஏன் அப்படி செய்தார், சிம்ரன் அண்ட் கோவின் நோக்கம் என்ன? என்பதுதான் படம்.

ஹாலிவுட் பாணி படங்களை (மிருதன், டிக் டிக் டிக், டெடி) தமிழுக்கு ஏற்கனவே கொண்டு வந்திருக்கிற இயக்குநர் சக்தி செளந்தரராஜன், இதில் பிரிடேட்டர், ஏலியன் வகை கதையைத் தந்திருக்கிறார். அவருடைய முந்தைய படங்களில் இருந்த ஆச்சரியமும் பரபரப்பும் அழுத்தமும் இதில், ‘ஆங்... அப்புறம்?’ என்றளவிலேயே இருக்கிறது. படத்தில் கேப்டனாக நடித்துள்ள ஆர்யாவும் கடமையே என்றபடிதான் வந்துபோகிறார். ஒரு ராணுவ கேப்டன் என்ற முறையில் எப்போதும் முறைப்போடு இருப்பதை மட்டுமே செய்கிறது அவர் நடிப்பு.

ஐஸ்வர்யா லட்சுமிக்கு அதிக வேலையில்லை. அவர் ஆர்யாவிடம் ஒரு பெட்டியை கொடுத்து, ‘இதை இப்ப திறக்காதீங்க’ என்று சொல்லும் போதே அவர் யார் என்கிற சஸ்பென்ஸை ஊகித்துவிட முடிகிறது. ஆர்யா டீமின் ஹரீஷ் உத்தமன், சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். ஆதித்ய மேனன், முதலில் ஆர்யா மீது வெறுப்பு காட்டி, பிறகு ‘குட்’ என்று மாறுகிற சினிமா ஃபார்முலா ராணுவ ஜெனரல்.

சயின்டிஸ்ட் சிம்ரன், கோகுல், காவியா ஷெட்டி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். டி.இமானின் பின்னணி இசை படத்தைக் காப்பாற்றப் போராடி இருக்கிறது. யுவாவின் ஒளிப்பதிவு பரவாயில்லை.

வினோத விலங்கு என்று படத்தில் காட்டப்படும் அந்தப் பிராணி, எந்தக் கொடூரத்தையும் செய்யவில்லை. அது செய்வதெல்லாம், காட்டுக்குள் வருபவர்களைப் பிடித்து முகத்தில் உமிழ்வதை மட்டும்தான். அதனால் அதன் மீது பயத்துக்குப் பதிலாக, பரிதாபமே வருகிறது. இப்படியொரு கதையை படமாக்க நினைத்திருக்கும் இயக்குநரின் முயற்சியை பாராட்டினாலும் அழுத்தமில்லாத திரைக்கதை அந்தப் பாராட்டைத் திரும்பப் பெற வைக்கிறது.

SCROLL FOR NEXT