தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வனாக நடித்தது எனக்கு கிடைத்த ஆசீர்வாதம்’ - ஜெயம் ரவி நேர்காணல்

செ. ஏக்நாத்ராஜ்

மணிரத்னம் இயக்கி இருக்கும் அந்தப் பிரம்மாண்ட வரலாற்றுப் படத்தில், ஜெயம் ரவிதான் ‘பொன்னியின் செல்வன்’!. சோழ சாம்ராஜ்ஜியம் கடல் கடந்தும் பரவ வித்திட்ட வீரன். அழுத்தமும் பொறுப்பும் நிறைந்த ஆழமான அந்த கேரக்டரில் நடித்தது பற்றி கேட்டால், ‘‘இதுல நடிக்க என்னைத் தேர்வு பண்ணினதே எனக்கான ஆசீர்வாதம்தான்’’ என்கிறார் ஜெயம் ரவி.

எப்படி?

முதல்ல, நாம சேர்ந்து படம் பண்றோம்னு மணி சார் சொல்லும்போதே மகிழ்ச்சியா இருந்தது. படம் ‘பொன்னியின் செல்வன், ‘நீதான் அந்த கேரக்டர் பண்றே’ன்னு சொன்னதும் இன்னும் மகிழ்ச்சியா உணர்ந்தேன். அதிகமான வாசகர்களால படிக்கப்பட்ட இந்தக் கதையில நான் இருக்கேன் அப்படிங்கறதே பெருமையான விஷயம்தானே.

இந்த கேரக்டருக்கு உங்களை எப்படி தயார்படுத்திக்கிட்டீங்க?

மணி சார், இந்தப் படம் தொடங்கறதுக்கு 6 மாசத்துக்கு முன்னாலயே நீளமா முடிவளர்க்கணும்னு சொன்னார். குதிரையேற்றம் பண்ணச் சொன்னார். இப்ப இருந்தே, வீட்டுலயும் நீ ராஜராஜ சோழனாதான் இருக்கணும்னு சொன்னார். ஏன்னா, ஒரே நாள்ல இந்த கேரக்டர் வந்திராது அப்படிங்கறதை எனக்குப் புரிய வச்சார். அதை நானும் உணர்ந்தேன். அதோட அவன் யாரு, எப்படிப்பட்டவன்னு எனக்கு நிறையச் சொன்னார். அதனாலதான் அந்த கேரக்டரை என்னால தாங்க முடிஞ்சதுன்னு நினைக்கிறேன்.

நாவலா படிக்கறதுக்கும் படத்துக்கும் வித்தியாசம் இருக்குமே?

கண்டிப்பா இருக்கும். உதாரணமா, ஒரு காட்சியை பத்து பக்கத்துல, நாவல்ல படிக்கலாம். ஆனா, ஒரே பேப்பர்ல சினிமா காட்சி முடிஞ்சிருக்கும். நாவலைப் படிச்சதுக்கும் பொன்னியின் செல்வனோட திரைக்கதையை படிச்சதுக்கும் நான் நடிச்சதுக்கும் நிறைய மாற்றங்கள் இருக்கும்.

வரலாற்றுப் படங்கள்ல நடிக்கிற அனுபவம் எப்படியிருக்கு?

கவச உடைகள், ஆபரணங்கள் எல்லாமே அதிக எடை கொண்டது. அப்புறம் அந்த வாள். அதைத் தூக்கறதுக்குப் பெரும் பலம் வேணும். அதோட குதிரையில போயி சண்டை போடுறதெல்லாம் ரொம்ப கஷ்டம். அந்த உடலமைப்புக்காக 2 வருஷம் ஸ்பெஷல் டயட்ல இருந்தேன். முதல் ஷெட்யூல் தாய்லாந்துல நடந்தது. ஒன்றரை மாதம் அங்க ஷூட்டிங். ஸ்பாட்ல எப்பவும் 150 குதிரை, நாலஞ்சு யானை, 35 கேரவன் சுத்திக்கிட்டு இருக்கும். ஒரு காட்சியில யானைக் காதுல போயி ஒரு விஷயம் சொல்லணும். மணி சார், ‘என்ன சொல்ல போறே?’ன்னு கேட்டார். ‘எதையாவது சொல்றேன் சார்’னு சொன்னேன். இல்ல, ‘இந்தப்படம் சீக்கிரம் முடியணும்னு சொல்லு’ன்னார். இந்த மாதிரி சுவாரஸ்யமான அனுபவங்கள் நிறைய இருக்கு. காலைல 3 மணிக்கு எல்லாருமே எழுந்திரிச்சிருவோம். சூரியன் உதிக்கிறதுக்கு முன்னால மேக்கப் போட்டு ரெடியா இருப்போம். இந்த மாதிரி எல்லாருமே கரெக்டா இருந்ததால, 150 நாள்ல ரெண்டு பார்ட்டை முடிக்க முடிஞ்சது.

மணிரத்னம் இயக்கத்துல நடிச்சது எப்படி இருந்தது?

அவர் படத்துல நடிக்கும்போது மிகச்சிறந்த நடிகர்கள் கூட, வேற மாதிரி பண்ணியிருப்பாங்க. அது எப்படிங்கற ரகசியத்தை தெரிஞ்சுக்கணுங்கற ஆசை எனக்கு இருந்தது. எல்லா நடிகர்களும் சேர்ந்து ஸ்கிரிப்ட் ரீடிங் பண்ணும்போது, ‘அடிப்படையான எமோஷனை மனசுல வச்சுக்குங்க. வார்த்தையில அழுத்தம் கொடுக்க வேண்டாம், அது போதும் புரிய வைக்கறதுக்கு’ன்னு சொன்னார் மணிசார். அப்பதான் ஒரு காட்சியில, பாடிலாங்வேஜ், வசன உச்சரிப்புன்னு எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி எப்படி நடிக்கணும்னு தெரிஞ்சுகிட்டேன். அது எனக்கு பெரிய பாடம். ஒவ்வொருத்தரும் அவங்க கேரக்டராகவே இருக்கணும்னு சொல்வார். நான் ஒரு காட்சியில கீழே பார்த்து பேசினேன். ‘நீ ராஜாய்யா, ஏன் கீழப் பார்க்கணும்?’ன்னு சொன்னார். இதே போல நிறைய விஷயங்கள், இந்தப் படத்து அனுபவங்களா இருக்கு.

SCROLL FOR NEXT