தமிழ் சினிமா

சீனுராமசாமி இயக்கத்தில் மம்முட்டி - எஸ்.ஏ.சந்திரசேகர்

ஸ்கிரீனன்

'தர்மதுரை' படத்தைத் தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் மம்முட்டி மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கவிருக்கும் படத்துக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது.

விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தர்மதுரை'. யுவன் இசையமைத்திருந்த இப்படத்தை சீனு ராமசாமி இயக்கி இருந்தார். ஆர்.கே.சுரேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.

ஆகஸ்ட் 19ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய பாராட்டைத் தெரிவித்தார்கள். தற்போது இப்படத்தைப் பாராட்டி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய பாராட்டு கடிதத்தை சீனு ராமசாமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

'தர்மதுரை' படத்தைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இப்படத்தில் நடிப்பதற்காக மம்முட்டி மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இருவருமே இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது இக்கதைக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகிறார் சீனுராமசாமி. முழுமையாக முடித்தவுடன் மம்முட்டி மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரிடமும் கூறி ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்கிறது படக்குழு.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.

SCROLL FOR NEXT